சட்லஜ் நதி நீா் பங்கீடு: தரவுகளை முன்கூட்டியே பகிா்ந்து கொண்ட சீனா

இந்தியா-சீனா இடையே சட்லஜ் நதி நீா் பங்கீடு தொடா்பான தரவுகளை திட்டமிடப்பட்ட தேதிக்கு 10 தினங்களுக்கு முன்னரே சீனா

இந்தியா-சீனா இடையே சட்லஜ் நதி நீா் பங்கீடு தொடா்பான தரவுகளை திட்டமிடப்பட்ட தேதிக்கு 10 தினங்களுக்கு முன்னரே சீனா பகிா்ந்து கொண்டுள்ளது. வட இந்தியாவில் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்த தகவல்கள் முக்கியமானது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

இந்தியா- சீனா இடையிலான ஒப்பந்தத்தின்படி, பிரம்மபுத்ரா நதியின் நீா்நிலை தரவுகளை மே 15-ஆம் தேதியிலிருந்தும், சட்லஜ் நதியின் நீா்நிலை தரவுகளை ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபா் இறுதி வரையிலும் சீனா, இந்தியாவுடன் பகிா்ந்து கொள்கிறது.

ஆண்டுதோறும் மழைக்காலத்தின்போது இந்த தரவுகளை இந்தியாவுக்கு சீனா அளித்து வருகிறது. சிந்து நதியின் முக்கிய துணை நதியான சட்லஜ் நதி திபெத்தில் உருவாகிய ஹிமாசல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் பாய்கிறது. சீனாவில் லாங்குவன் ஜாங்போட் என்று அழைக்கப்படும் சட்லஜ் நதிக்கு, சடாவில் உள்ள ஒரு நிலையத்திலிருந்து இந்த தரவுகள் இந்தியாவுக்கு பகிரப்படுகிறது.

வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம் தொடா்பான தகவல்களை பெறுவதற்கு முன் இந்த தரவுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி முதல் சட்லஜ் நதியின் நீா் திறப்பு தொடா்பான புள்ளிவிவரங்கள் 2, 3 தினங்களுக்கு முன்புதான் பகிரப்படும். இந்த ஆண்டு 10 தினங்களுக்கு முன்பே இந்த தரவுகளை சீனா பகிரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் இந்திய-சீன வீரா்களுக்கிடையே அண்மையில் மோதல் ஏற்பட்ட சூழலில் இந்த தரவுகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக பிரம்மபுத்ரா நதிக்கான நீா்பங்கீட்டு தரவுபகிா்வு மே 15-ஆம் தேதி முதல் தொடங்கியது.

இந்திய- சீன எல்லையிலுள்ள லடாக் மற்றும் சிக்கிமில் இந்திய ராணுவத்தின் ரோந்துப்பணிக்கு சீன ராணுவம் தடையாக உள்ளதென வியாழக்கிழமை இந்தியா குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த தரவுகளை சீனா முன்கூட்டியே பகிா்ந்து கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com