சொந்த ஊர் திரும்பக் காத்திருக்கும் தாராவி தமிழர்கள்!

கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் மகாராஷ்டிர மாநிலம், தாராவிப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப காத்திருக்கின்றனர்.
சொந்த ஊர் திரும்பக் காத்திருக்கும் தாராவி தமிழர்கள்!

கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் மகாராஷ்டிர மாநிலம், தாராவிப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் இதுவரை 1,340 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மும்பைக்கு தொழில், வேலை, சுற்றுலா, கல்விக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மக்கள், சொந்த ஊருக்குத் திரும்ப மிகுந்த ஆவலாக உள்ளனர். மே 17}ஆம் தேதி மூன்றாம்கட்ட தேசிய பொது முடக்கம் முடிவுக்கு வந்த பிறகு, ஊருக்குச் செல்ல வழிபிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும் மும்பை} தாராவியில் 8 லட்சம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் உள்ளனர். 

தொழில் குவிமையமாக விளங்கும் தாராவியில் கரோனா தீநுண்மித் தொற்று வேகமாகப் பரவிவருவதால், பொதுமுடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இதனால், தொழில், வேலைவாய்ப்புகள் அனைத்தையும் இழந்துள்ள தமிழர்கள், வாழ்வாதாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். 

இந்த நிலையில், தமிழறிஞர் சு.குமணராசன் தலைமையிலான இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் தாராவி பகுதி தமிழர்களுக்கு 1.5 லட்சம் கிலோ உணவு தானியத்தை வழங்கினர்.

இதேபோல, இந்திய பேனா நண்பர் பேரவை போன்ற பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உணவு தானியங்களை வழங்கியுள்ளன.

அதே சமயம், மும்பையில் குறிப்பாக தாராவியில் கரோனா தீநுண்மித் தொற்று அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தாராவியில் 1327 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களில் 56 பேர் உயிரிழந்தனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமிழர்களிடையே காணப்படுகிறது. இதனால், தமிழகத்துக்குத் திரும்ப ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் மகாராஷ்டிரத்தில் இருந்து தமிழர்களை அழைத்துக்கொள்ள தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்று வருந்துகிறார்கள். 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளான சேது.சொக்கலிங்கம், அன்பழகன், இலெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் உள்ளிட்டோரின் முயற்சியில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை தனியார் பேருந்துகள் மூலம் தலா ரூ. 10 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி 10 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அன்பழகனின் முயற்சியில் ரூ. 20 லட்சம் செலவில் 18 பேருந்துகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டனர். இது தவிர, இவர்களின் முயற்சியால் புணே, மும்பையில் இருந்து 2 ரயில்கள் திருநெல்வேலி, திருச்சிக்குப் புறப்பட்டன. 

புணே, கோலாப்பூர், சதாரா, நாசிக், ரத்னகிரி, தவுண்ட் நகரங்களைச் சேர்ந்த 2,800 தமிழர்கள் இரு ரயில்களில் பயணப்பட்டு, தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, தென்காசி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களைச் சென்றடைந்தனர்.

ஆனால், கூடுதல் கட்டணங்களைச் செலுத்தி சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் 10 லட்சம் தமிழர்கள் மகாராஷ்டிரத்தில் செய்வதறியாது முடங்கியுள்ளனர். 

தமிழகம் திரும்ப விருப்பமாக இருந்தாலும், கையில் பணம் இல்லாததால் தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

புணேயில் சிக்கிக்கொண்ட சென்னையைச் சேர்ந்த ரிஷிசங்கரன் கூறுகையில், "பிரசவத்துக்காக புணே வந்துள்ள எனது மனைவியைக் காண வந்தேன். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறேன். என்னைப் போல புணேயில் ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டுள்ளனர். மின்னஞ்சல், சுட்டுரை, முகநூல் வழியாக தமிழக அரசுக்கு விடுத்த வேண்டுகோளை யாரும் கண்டு கொள்ளவில்லை. சொந்த ஊருக்கு வர விரும்பும் எங்களை அழைத்துவர ரயில்வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.


தாராவியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கூறுகையில், "தினக்கூலியை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தேன். பொது முடக்கத்தால் வேலையில்லை. உணவுக்கே தவிக்கும் நிலை உள்ளது. மகாராஷ்டிரத்திலும் கரோனா வேகமாகப் பரவிவருகிறது. குடும்பம் ஊரில் இருப்பதால், தாயகம் திரும்பலாம் என்றால் அதற்கும் வழியில்லாமல் இருக்கிறேன்.  ஏழை மக்களை அழைத்துச் செல்ல பேருந்துகளை இயக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பேருந்துக் கட்டணம் கொடுக்கவும் எங்களிடம் பணம் இல்லை. உணவுப் பொட்டலங்களை நம்பித்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்றார். 

இலெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் கூறுகையில், "உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஒடிஸô, ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், மகாராஷ்டிர அரசுடன் பேசி ரயில், பேருந்து வசதிகளைச் செய்து தந்தன.ஆனால், தமிழக அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. 

தாராவியில் மக்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு கட்டுமானத் தொழிலாளர்களாக, தெருவோர வியாபாரிகளாக, தினக்கூலிகளாக 8 லட்சம் தமிழர்கள் உள்ளனர். பேருந்து, ரயில் வசதிகளை தமிழக அரசு செய்துகொடுத்தால் தமிழகம் திரும்ப மகாராஷ்டிரம் முழுவதும் 10 லட்சம் தமிழர்கள் காத்திருக்கின்றனர்' என்றார்.

தமிழகம் திரும்பியவர்களுக்கு கரோனா
வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்கள், தாயகம் திரும்புவதற்கு உதவியாக தமிழக அரசு அண்மையில் இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மும்பையிலிருந்து தமிழகம் திரும்ப, 1,500 பேர் பதிவு செய்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் தாராவியைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில், மும்பையில் இருந்து  தமிழகம் திரும்பிய 300-க்கும் மேற்பட்டோருக்கு, கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com