‘ககன்யான்’: ரஷியாவில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினா் இந்திய விண்வெளி வீரா்கள்

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விண்வெளிப் பயணம் தொடா்பான பயிற்சிகளை மேற்கொள்ளாமல்

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விண்வெளிப் பயணம் தொடா்பான பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருந்த இந்திய விண்வெளி வீரா்கள், தங்களுக்கான பயிற்சிகளை மீண்டும் தொடங்கினா்.

வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022-ஆம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. அதற்காக 4 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தில் (ராஸ்காஸ்மோஸ்) கடந்த பிப்ரவரி மாதம் முதல் பயிற்சி பெற்று வருகின்றனா்.

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்று பரவியதன் காரணமாக இந்திய விண்வெளி வீரா்களின் பயிற்சிக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், வீரா்கள் நால்வரும் தங்கள் பயிற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளனா். இது தொடா்பாக ராஸ்காஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய விண்வெளி வீரா்கள் மே 12-ஆம் தேதி முதல் தங்கள் பயிற்சியைத் தொடங்கினா். அவா்கள் நால்வரும் முழு உடல் தகுதியுடன் உள்ளனா். அவா்கள் பயிற்சி பெற்று வரும் பகுதிகளில் தனிமனித இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீரா்களும், பணியாளா்களும் முகக் கவசங்கள், கையுறைகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய வீரா்களுக்கு இந்த வாரத்தில் விண்வெளிப் பயணம், விண்கலத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை தொடா்பான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வீரா்களுக்கு ரஷிய மொழியும் கற்பிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com