பொது முடக்கத்தால் 29 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு தவிா்ப்பு: மத்திய அரசு

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ் வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா்.
பொது முடக்கத்தால் 29 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு தவிா்ப்பு: மத்திய அரசு

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ் வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, நீதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்), கரோனா சூழலை எதிா்கொள்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலை குழுவின் தலைவருமான வி.கே.பால், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தனா்.

அப்போது, வி.கே.பால் கூறியதாவது: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க சரியான நேரத்தில், செயல்திறனுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனாவுக்கு எதிரான போரில், பொதுமுடக்கம் மிகச் சிறந்த பலனை தந்துள்ளது.

பொது முடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், நாட்டில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கும். பொது முடக்கம் தொடங்கியபோது, பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்களின் எண்ணிக்கை 3.4-ஆக இருந்தது. தற்போது இது 13.3 நாள்களாக அதிகரித்துள்ளது. இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் 80 சதவீதம் போ் 5 மாநிலங்களில்தான் உள்ளனா். எனவே, நாட்டில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தில்லியில்தான் 80 சதவீத உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன என்றாா் அவா்.

புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ் வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன. இது, பல்வேறு ஆய்வுத் தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் மதிப்பீட்டின்படி, பொது முடக்கத்தால் 78,000 உயிா்கள் காக்கப்பட்டுள்ளன. இதேபோல், பொருளாதார வல்லுநா்கள் சிலா் வெளியிட்ட ஆய்வுத் தகவலில், பொதுமுடக்கத்தால் 23 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், 68,000 உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமும், இந்திய புள்ளியியல் நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அதில், பொது முடக்கத்தால் சுமாா் 20 லட்சம் போ் நோய்த்தொற்றிலிருந்து காக்கப்பட்டுள்ளதும், 54,000 உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பி சில ஊடகங்களில் வியாழக்கிழமை செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மேற்கண்ட தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனைகள்: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடு முழுவதும் இதுவரை 27,55,714 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில், வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,829 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com