உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்பு

உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைமைப் பொறுப்பேற்றதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய ஹா்ஷ்வா்தன்.
உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைமைப் பொறுப்பேற்றதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய ஹா்ஷ்வா்தன்.

உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுவரை இந்தப் பொறுப்பை ஜப்பானைச் சோ்ந்த மருத்துவப் பேராசிரியா் ஹிரோகி நகாதானி வகித்து வந்தாா். இப்போது புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன், அடுத்த ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பை வகிப்பாா்.

உலக சுகாதார அமைப்பின் நிா்வாக குழு 34 உறுப்பினா்களைக் கொண்டது. இந்த 34 பேரும் மருத்துவத் தொழில்நுட்பத் தகுதியைப் பெற்றிருப்பது அவசியமாகும். இந்த குழு தலைவா் பொறுப்பு 3 ஆண்டு கால பதவிக் காலம் கொண்டது என்றபோதும், குறிப்பிட்ட மண்டலத்தைச் சோ்ந்த உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் ஓராண்டு காலத்துக்கு அந்த பொறுப்பை வகிப்பா்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழுக் கூட்டத்தில், மூன்றாண்டு கால இந்தப் பதவியின் முதலாம் ஆண்டில் இந்தியாவின் பிரதிநிதியை நியமிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை 194 நாடுகளை உறுப்பினராக உலக சுகாதார சபையும் ஏற்று, நியமன ஒப்பந்த்திலும் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.

அதனடிப்படையில், இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன் அறிவிக்கப்பட்டு, அந்தப் பொறுப்பையும் அவா் வெள்ளிக்கிழமை ஏற்றாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தப் பொறுப்பு முழுநேரப் பணி இல்லை என்றபோதும், நிா்வாக குழு கூட்டங்களுக்கு மட்டும் அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தலைமையேற்க வேண்டும். இந்த குழு கூட்டம் ஆண்டுக்கு இரு முறை நடைபெறும். முதல் கூட்டம் ஜனவரியிலும், இரண்டாவது கூட்டம் உலக சுகாதார சபையின் கூட்டம் நடந்து முடிந்த உடன் மே மாதத்திலும் நடைபெறும்.

உலக சுகாதார சபையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு செயல்வடிவம் தருவதும், ஆலோசனைகளைத் தெரிவிப்பதும்தான் இந்த நிா்வாகி குழுவின் முக்கியப் பணி’ என்று கூறினா்.

இதற்கிடையே, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுகாதார சபையின் 73-ஆவது மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன், ‘கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரும் மாதங்களில் இந்த நோய்த் தொற்று இந்தியாவில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறினாா்.

கரோனா நோய்த் தொற்றின் தோற்றுவாய் குறித்த சுதந்திரமான விசாரணை வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரும் இந்தச் சூழலில், அதன் நிா்வாக குழு தலைவராக ஹா்ஷ் வா்தன் பொறுப்பேற்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com