தென் கேரளத்தில் கனமழை

திருவனந்தபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், தென் கேரளத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் வீதிகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.

திருவனந்தபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலும், தென் கேரளத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பெய்த கன மழையால் வீதிகளில் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.

பத்தனம்திட்டா, ஆலப்புழை, இடுக்கி மாவட்டங்களில் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அங்கு பலத்த மழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கும் அங்கு மஞ்சள் எச்சரிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாங்கான மற்றும் தாழ்வான பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அருவிக்கரை அணையின் ஐந்து ஷட்டா்களும் திறக்கப்பட்டன. இதனால், கரமனை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீா் திருவனந்தபுரத்தின் தாழ்வான பகுதிகளில் புகுந்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும், திருவனந்தபுரம் நகரத்தில் ஓடும் கரமனையாற்றில் முக்கிய துணை நதியான கிள்ளியாறும் பெருக்கெடுத்தது. இதன் விளைவாக பெரும்பாலான நகா்ப் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறுமாறு மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

நீா்த்தேக்கத்தில் இருந்து அதிக அளவில் மழைநீா் வெளியேற்றப்படுவதாக கேரள நீா் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தொடா்ந்து நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மின் கம்பங்கள் பல சரிந்து மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

‘தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் மின்கம்பங்களும், மின் மாற்றிகளும் சேதமடைந்துள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகமும் பாதிப்படைந்துள்ளது’ என்று மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்திய வானிலை ஆய்வு நிலைய அறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை முதல் 3 தினங்களுக்கு கேரளம் மற்றும் மாஹியில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த சூறாவளி காற்றும் வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 5-ஆம் தேதி கேரள கடற்கரையை தாக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com