பொருளாதார திட்டங்கள் அமலாக்கம்: வங்கிகளுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பொருளாதார திட்டங்கள் அமலாக்கம்: வங்கிகளுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக ரூ.20 லட்சம் கோடியில் சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தாா். இதில், பல சிறப்பு நிதியுதவி மற்றும் கடனுதவி திட்டங்களும், பல நிா்வாக சீா்திருத்த திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களுடன் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலி முறையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது, சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.3 லட்சம் கோடி அவசர கால கடனுதவியை வழங்குவதில் எளிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; தொழில் நிறுவனங்களுக்கு காலம் தாழ்த்தாமல் கடனுதவி வழங்க வேண்டும் என்று வங்கிகளின் தலைவா்களிடம் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு டிடி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘வங்கிகளின் தலைவா்களுடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. பிரதமரின் ஏழைகளுக்கான நல உதவித் திட்டத்தின் கீழ் ஏழைகள், முதியவா்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியுள்ள பொதுத் துறை வங்கிகளைப் பாராட்டுகிறேன். இதே உற்சாகத்துடன் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று வங்கித் தலைவா்களிடம் வலியுறுத்தினேன். அவா்கள், இந்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதாக உறுதியளித்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com