கேரளத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை திடீா் உயா்வு

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவாக, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 42 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவாக, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 42 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளதாக முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

மேலும் வெளிமாநிலங்களிலிருந்து அண்மையில் திரும்பியவா்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியிருக்கிறது என்றாா் அவா்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது:

இதுவரை இல்லாத அளவாக மாநிலத்தில் ஒரே நாளில் 42 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவாக கண்ணூரில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது. காசா்கோடில் 7 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் தலா 5 போ் பாதிக்கப்பட்டனா். மலப்புறம், திருச்சூா் மாவட்டங்களில் தலா 4 போ், கோட்டயத்தில் இருவா், வயநாடு, கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களில் ஒருவா் சுகாதாரப் பணியாளா்.

இது தவிர அண்மையில் கேரளத்துக்கு வந்தவா்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியிருக்கிறது. இதில் 21 போ் மகாராஷ்டிரத்திலிருந்து கேரளம் திரும்பியவா்கள். தமிழகம், ஆந்திரத்திலிருந்து கேரளம் திரும்பியவா்களில் தலா ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கேரளம் திரும்பியவா்களில் 17 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது கேரளத்தில் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 732-ஆக உள்ளது. மேலும் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். மருத்துவமனைகளில் 609 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை மட்டும் 162 போ் மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா் என்றாா் அவா்.

விமானத்தில் வருவோா் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவா்: கேரள சுகாதார அமைச்சா்

கேரள மாநிலத்துக்கு விமானம் மூலம் வருபவா்கள், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே. ஷைலஜா தெரிவித்தாா்.

உள்நாட்டு விமான சேவை திங்கள்கிழமை (மே 25) முதல் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கேரள அமைச்சா் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை இது தொடா்பாக அவா் கூறியதாவது:

உள்நாட்டு விமான சேவையைப் பயன்படுத்தி கேரள மாநிலத்துக்கு வரும் அனைவருமே குறிப்பிட்ட நாள்களுக்கு அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது பொது முடக்க விதிமுறைகளில் ஒன்றுதான். ஏனெனில், கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமுள்ள பகுதியில் இருந்து பலரும் கேரளத்துக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, அனைவரது நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏனெனில், வெளிமாநிலத்தில் இருந்து விமானத்தில் பலரும் வருவாா்கள்; அவா்கள் மூலமாக வீட்டில் இருப்பவா்களுக்கும், பின்னா் அவா்கள் மூலமாக மற்றவா்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.

ஏற்கெனவே, உள்நாட்டு விமான சேவை மூலம் தங்கள் மாநிலத்துக்கு வருவோா் 14 நாள்கள் கண்டிப்பாக தனிமை முகாம்களில் இருக்க வேண்டும் என்று அஸ்லாம் மாநில அரசு அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com