ஊரடங்கால் பூங்காவில் தஞ்சமடைந்த சிறுவன் சுட்டுரையால் பெற்றோருடன் இணைந்தார்

பல முக்கியச் செய்திகளையும் தாண்டி வார இறுதி நாட்களில், சுட்டுரையில் பகிரப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம், அவன் தனது பெற்றோருடன் இணைய உதவி செய்துள்ளது.
ஊரடங்கால் பூங்காவில் தஞ்சமடைந்த சிறுவன் சுட்டுரையால் பெற்றோருடன் இணைந்தார்

பல முக்கியச் செய்திகளையும் தாண்டி வார இறுதி நாட்களில், சுட்டுரையில் பகிரப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம், அவன் தனது பெற்றோருடன் இணைய உதவி செய்துள்ளது.

சுட்டுரையில் இந்த சிறுவன் பற்றி தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஊரடங்கு நடவடிக்கைக்கு முன்பு, ஒரு தம்பதி தனது மகனை தில்லியில் உள்ள உறவினர்களிடம் விட்டுவிட்டு பிகாரில் உள்ள தங்களது வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதற்கிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, தில்லியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுவன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டான். ஊரடங்கால், பெற்றோரும் தில்லி திரும்ப முடியாமல், சிறுவனும் போக்கிடம் இல்லாமல் துவாரகா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் தஞ்சம் அடைந்தான்.

பூங்காவுக்கு அருகே வசித்து வந்த சமூக ஆர்வலர் ஒருவர், சிறுவனைப் பார்த்து அவனுக்கு உணவு வழங்கி வந்துள்ளார். சிறுவனின் புகைப்படத்தையும் சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். அதனை இந்தியா கேர்ஸ் என்ற அமைப்பையும் அந்த சுட்டுரையில் டேக் செய்ததன் மூலம், சிறுவனைப் பற்றிய விவரங்கள் சுட்டுரையில் வைரலானது.

உடனடியாக பிகாரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் குமார், இந்தியா கேருடன் இணைந்து, பிகாரில் உள்ள சிறுவனின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்கள் தில்லி வந்து சிறுவனை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதையடுத்து, சிறுவன் தனது பெற்றோருடன் இணைந்தான். 

சிறுவன் குடும்பத்தோடு இணைய, சுட்டுரைப் பதிவு தொடர்ந்து பொதுமக்களால் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டதே காரணம் என்றும், ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் அதற்கு பணமோ, பொருளோ தேவையில்லை என்றும், இவ்வாறு சில சுட்டுரைகளை அது சென்றடையும் இடத்துக்குக் கொண்டு சேர்த்தாலே போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு என்றும் பாராமல் வீட்டை விட்டு துரத்திய மனிதநேயமற்ற உறவினர்களுக்கு மத்தியில், மனிதாபிமானத்தோடு, சிறுவன் பெற்றோரிடம் சென்றடைய உதவிய நல்லுள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது என்று இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com