உம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கியது மத்திய அரசு

"உம்பன்' புயலால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடியை திங்கள்கிழமை
உம்பன் புயல் பாதிப்பு மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி வழங்கியது மத்திய அரசு


புது தில்லி: "உம்பன்' புயலால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மேற்கு வங்க மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.1,000 கோடியை திங்கள்கிழமை விடுவித்தது. அதே நேரத்தில் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு ஒன்று விரைவில் மேற்கு வங்கத்துக்கு செல்ல இருக்கிறது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி ரூ.1,000 கோடி நிவாரணத்தொகையை அறிவித்தார். இதேபோல புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸாவுக்கு ரூ.500 கோடியையும் பிரதமர் அறிவித்தார்.

வங்கக் கடலில் உருவான "உம்பன்' புயல் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கடந்த புதன்கிழமை கரையைக் கடந்தது. அப்போது 190 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. 

கன மழையால் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகளும், பயிர்களும் சேதமடைந்தன. புயல் பாதிப்புக்கு அந்த மாநிலத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், புயலால் ஒடிஸா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

"மேற்கு வங்கத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சேதத்தை உம்பன் புயல் ஏற்படுத்திவிட்டது. ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தில்லியில் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா தலைமையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் கூட்டம் நடைபெற்றது. 

இதில் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது தவிர உள்துறை அமைச்சக குழு ஒன்று விரைவில் மேற்கு வங்கத்துக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இக்குழுவினர் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்துக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதற்காக, அந்த மாநில தலைமைச் செயலர் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

புயல் பாதித்த பகுதிகளில் தொலைத்தொடர்பு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் வழங்க முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார். ஏற்கெனவே மத்திய மாநில, பேரிடர் மீட்புக் குழுவினருடன் ராணுவமும் புயல் பாதித்த இடங்களில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com