நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த தயார்நிலை: வெங்கய்ய நாயுடு ஆய்வு

பொது முடக்கத்துக்கு இடையே விமானப் போக்குவரத்து, ரயில்கள் இயக்கம் என படிப்படியாக இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள்
நாடாளுமன்றக் குழு கூட்டங்களை நடத்த தயார்நிலை: வெங்கய்ய நாயுடு ஆய்வு


புது தில்லி: பொது முடக்கத்துக்கு இடையே விமானப் போக்குவரத்து, ரயில்கள் இயக்கம் என படிப்படியாக இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற குழு கூட்டங்களை நடத்துவதற்கான தயார்நிலை குறித்து மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் இந்த நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்கும் இரு அவைகள் மற்றும் அமைச்சகங்களின் அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட தொடர் பொது முடக்கம் காரணமாக, தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு துறைகள் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன. பொதுமக்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இந்த பாதிப்புகளை சீர்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துவந்தபோதும், "எதிர்க் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பினருடன் ஆலோனை நடத்தி முழுமையான நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற குழுக் கூட்டங்களையும் நடத்த வேண்டும்' என எதிர் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதுதொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இருவரும் ஆலோசனை மேற்கொண்டு, ஆய்வுக் கூட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலக அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில், 24 துறைகள் சார்ந்த குழு கூட்டங்களை நடத்த நாடாளுமன்ற கட்டடத்தில் 9 அறைகளும், பிற குழுக்களின் கூட்டங்களை நடத்த கூடுதலாக 6 அறைகளும் தயார் நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், இந்த கூட்டங்களில் பங்கேற்கும் இரு அவை மற்றும் அமைச்சக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். கூட்டம் நடைபெறும் அறைகளில் கூடுதல் இருக்கைகள் மைக்ரோஃபோன் வசதியுடன் இடம்பெறச் செய்யவேண்டும் என்று அதிகாரிகளை இரு அவைத் தலைவர்களும் அறிவுறுத்தினர்.

மேலும், புதிதாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர்கள் மே 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நான்காம் கட்ட பொது முடக்கத்துக்குப் பிறகு பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு நீங்கிய பிறகு ஏழு மாநிலங்களில் காலியாக உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, இதுதொடர்பாக ஆய்வு நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com