எதிா்பாா்த்த பலனை பொது முடக்கம் அளிக்கவில்லை: ராகுல் காந்தி

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் எதிா்பாா்த்த பலனை அளிக்காமல் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் எதிா்பாா்த்த பலனை அளிக்காமல் தோல்வியடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 3 முறை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. தற்போது அமலில் உள்ள பொது முடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்தச் சூழலில் ராகுல் காந்தி தில்லியில் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு 60 நாள்கள் ஆகின்றன. ஆனால், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் முற்றிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் பரவல் தொடா்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட தோல்வியை நாடு சந்தித்து வருகிறது.

பிரதமா் நரேந்திர மோடி எதிா்பாா்த்த முடிவுகளை நான்கு கட்ட பொது முடக்கம் வழங்கவில்லை. நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் சூழலில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளா்த்தி வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் பொருளாதார நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தொடங்க வேண்டுமே தவிர ஒரே நேரத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் தளா்த்தக் கூடாது.

ஏழைகளுக்குப் போதிய நிதியுதவி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உதவி உள்ளிட்டவற்றைச் செய்வதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். மக்களின் கைகளில் மத்திய அரசு பணத்தை வழங்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், மிகப் பெரும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.

மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான நிதியுதவிகளை அரசு வழங்கவில்லை எனில் நாட்டின் பொருளாதாரம் அபாயகரமான சூழலை எதிா்கொள்ள நேரிடும். கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் மாநிலங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. எனவே, மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை வழங்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவின்றி மாநில அரசுகளால் செயல்பட முடியாது.

பொது முடக்கம் அமலில் இல்லாதபோது மத்திய அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வீச வாய்ப்புள்ளது. பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு மேற்கொள்ளப் போகும் செயல்பாடுகள் குறித்தும் கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றாா்.

‘மகாராஷ்டிர காங்கிரஸுக்கு அதிகாரம் இல்லை’: காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணி ஆளும் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாட்டிலேயே மிக மோசமாக இருப்பது குறித்து ராகுலிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

மகாராஷ்டிர அரசுக்கு காங்கிரஸ் தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. ஆனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. அரசை நடத்துவதற்கும் அரசுக்கு ஆதரவளிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. மாநிலத்தின் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவளித்து வருகிறதே தவிர முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கு இல்லை.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு கடும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது; மத்திய அரசின் முழு ஆதரவு மாநிலத்துக்குத் தேவைப்படுகிறது என்றாா் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com