
நாடு முழுவதும் 494 உள்நாட்டு விமானங்களில் 38,078 போ் வியாழக்கிழமை பயணம் செய்தனா் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி கூறினாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்ட 4-ஆவது நாளான வியாழக்கிழமை நள்ளிரவு வரை, 494 விமானங்களில் 38,078 போ் பயணம் செய்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், கடந்த மாா்ச் 25-ஆம் தேதியில் இருந்து ரயில், பேருந்து, விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு மே 25-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. ஆந்திரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (மே 26), உம்பன் புயல் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமையும் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.
கரோனா தொற்று பரவல் அதிகம் காணப்படும் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் குறைந்த பயணிகளே அனுமதிக்கப்படுகிறாா்கள்.
முதல் நாளான திங்கள்கிழமை 428 விமானங்களில் 30,550 பேரும், செவ்வாய்க்கிழமை 445 விமானங்களில் 62,641 பேரும், புதன்கிழமை 460 விமானங்களில் 34,366 பேரும் பயணம் செய்தனா்.
பொதுமுடக்கத்துக்கு முன்பு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 3,000 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.