ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்ட முடியுமா?

கரோனா வைரஸ் பரவலுக்கு அடுத்தபடியாக தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 
ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்ட முடியுமா?

கரோனா வைரஸ் பரவலுக்கு அடுத்தபடியாக தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்பிரிக்கா, அரேபிய நாடுகளில் உருவாகி ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக வரும் வெட்டுக்கிளிகள் இந்தியாவையும் வந்தடைந்துள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் படையெடுத்து விட்டுச் செல்லும் வெட்டுக்கிளிகள், இவ்வாண்டு இந்தியாவின் மற்ற மாநிலங்களையும் குறி வைத்துள்ளன. 

வெட்டுக்கிளிகளில் ஒருவகை இனமான பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ வரை செல்ல முடியும். மேலும் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளிகள் ஒரேநாளில் 35,000 பேர் உண்ணக்கூடிய உணவை உண்ணும் தன்மை கொண்டது. ஒரு பயிரின் அனைத்து பகுதிகளையும் அழித்து தின்னக் கூடியது. 

இந்நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இவை மேலும் 7 மாநிலங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெட்டுக்கிளிகளை விரட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் ட்ரோன் மூலமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.

மாறாக, விவசாயிகள் தகரங்கள் அல்லது இரும்புப் பொருள்களை வைத்து ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த ஒலி மூலமாக வெட்டுக்கிளிகளை விரட்ட முடியாது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. 

மனிதன் சாதாரணமாக 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலிகளை கேட்க முடியும். 20 ஹெர்ட்ஸ்-க்கு குறைவான ஒலி 'தாழ் ஒலி'(infra sonic) என்றும் 20,000 ஹெர்ட்ஸ்-க்கு அதிகமான ஒலி 'மீயொலி' அல்லது 'மிகை ஒலி'(ultra sonic) என்றும் அழைக்கப்படுகிறது. மிகையொலியை மனிதன் கேட்க முடியாது. அவ்வாறு கேட்கும்பட்சத்தில் செவித்திறன் பாதிக்கப்படும்.

அதேபோன்றே பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என ஒவ்வொன்றுக்கும் கேட்கும் திறனான ஒலி அதிர்வெண் அளவுகள் மாறுபடுகின்றன.

நாய்கள், பூனைகள் போன்ற சிறிய பாலூட்டிகள் - 22-25 கிலோ ஹெர்ட்ஸ்

கொசுக்கள், ஈக்கள், சிலந்திகள், கரப்பான் பூச்சிகள் - 38-44 கிலோ ஹெர்ட்ஸ்

பல்லிகள் - 52-60 கிலோ ஹெர்ட்ஸ் 

எலிகள் 60 - 72 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்க முடியும். 

மனிதனின் காதுகள் மிகை ஒலியை உணர முடியாவிட்டாலும் பறவைகள், விலங்குகள் இதனை உணரவும் வெளிப்படுத்தவும் முடியும். இவைகள் தன் இனத்திற்குள் மிகை ஒலி மூலமாகவே தொடர்புகொள்கின்றன என்றும் கூறப்படுகிறது. 

கரப்பான் பூச்சிகளின் முன்பகுதியில் உள்ள இழைகள் மிகை ஒலியை உணரும் திறன் கொண்டவை. அதேபோன்று சிலந்திகள், குளவிகள், வண்டுகள், ஈக்கள் போன்றவை மிகை ஒலியை கண்டறிய சவ்வுகளை கொண்டுள்ளன. ஆனால், ஒரு பறவையையோ, விலங்கோ அது கேட்கும் திறனை விட அதிக ஒலியை எழுப்பும் பட்சத்திலேயே அது குழப்பமடைய வாய்ப்புள்ளதாம்.  வெட்டுக்கிளிகளை பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 30,000 ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒலிகளை கேட்கும் தன்மை கொண்டது. எனவே, அதைவிட அதிகமான ஒலியை எழுப்பினால் மட்டுமே அதனை விரட்ட முடியும். 

அவ்வாறு அதிகமான ஒலியை எழுப்பும்போது, அது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை உருவாக்கி அதிர்வெண்ணை நெரித்து நிலைகுலையச் செய்யும். எனவே, மிகை ஒலியை எழுப்பினால் மட்டுமே வெட்டுக்கிளிகளை விரட்ட முடியும். 

வீடுகளில் கொசுக்கள், கரப்பான் பூச்சிகளை அழிக்க அல்ட்ராசவுண்ட் கருவிகள் உள்ளன. அவை கொசுக்கள் அல்லது கரப்பான் பூச்சிகளின் கேட்கும் திறன் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல, வெட்டுக்கிளிகளை விரட்ட மனிதர்கள் எழுப்பும் ஒலி போதாது என்றும் குறைந்தபட்சம் 30,000 ஹெர்ட்ஸ்க்கு அதிகமான மிகையொலிகளை எழுப்பினால் மட்டுமே அவற்றை விரட்ட முடியும் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com