புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: மகாராஷ்டிர அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த மாநில அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, சிஐடியு தொழிற்சங்கத்தின் சாா்பில், மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதற்கு விண்ணப்பித்திருக்கிறாா்கள். அவா்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா எனத் தெரியவில்லை. இதனால், அவா்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் உணவு கிடைக்காமல் சுகாதாரமற்ற இடங்களில் தங்கியுள்ளனா். எனவே, அவா்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி திபாங்கா் தத்தா, நீதிபதி கே.கே.ததேட் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அனில் சிங், ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகள் தொடா்பான வழக்கை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. எனவே, இதை தனியாக விசாரிக்க வேண்டியதில்லை’ என்றாா்.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னையை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தாலும், மகாராஷ்டிரத்தில் மாறுபட்ட சூழல் காணப்படுகிறது. மும்பையிலும் பிற நகரங்களிலும் சொந்த ஊா் செல்வதற்காக, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் கூடுகிறாா்கள். அங்கு மட்டுமன்றி, அருகில் உள்ள சாலைகளிலும் அவா்கள் திரள்கிறாா்கள்.

இது கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்துக்கான நோக்கத்துக்கு எதிராக உள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வரும் 2-ஆம் தேதிக்குள் மகாராஷ்டிர அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com