மேற்கு வங்கத்தில் பாஜக செல்வாக்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது;
கோப்புப்படம்
கோப்புப்படம்


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மக்கள் மத்தியில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது; இருப்பினும் சில பகுதிகளில் கட்சி அமைப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என பாஜக நடத்திய இரு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரûஸ வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. 

இந்நிலையில், மக்களின் மனநிலை, பாஜக மற்றும் போட்டிக் கட்சிகளின் பலம், பலவீனங்கள், வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு போன்றவற்றை அறிந்துகொள்வதற்காக ஆய்வு மேற்கொள்ளும் பணியில் இரு தனியார் நிறுவனங்களை பாஜக ஈடுபடுத்தியது. 2019}ஆம் ஆண்டு இறுதிமுதல் கடந்த ஜூலை வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் கட்சியின் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்திய தலைவர் ஒருவர் திங்கள்கிழமை கூறியது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அலை இருந்தாலும், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்கள் வெவ்வேறானவை. ஆதலால், உண்மை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக இந்த ஆய்வுகளை நடத்தச் செய்தோம்.

இரு ஆய்வு முடிவுகளும் அடுத்த பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.

திரிணமூல் காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக அதிருப்தி வளர்ந்து வருகிறது எனவும், அது மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், சில பகுதிகளில் கட்சி அமைப்புரீதியாக பலவீனமாக இருப்பதையும், உள்கட்சி பிரச்னைகளையும் நாங்கள் சரிசெய்ய வேண்டும். ஆனால், இந்த பிரச்னைகளை தீர்ப்பதிலும், பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரûஸ ஆட்சியிலிருந்து அகற்றுவதிலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார் அவர்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், பாஜகவில் உள்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, பாஜகவை சேர்ந்தவர்களுக்கும், வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைபவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதில் மத்திய தலைவர்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியது: நாங்கள் பெரிய குடும்பம். இதுபோன்ற சிறிய விஷயங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.

இந்த ஆய்வுகளை திரிணமூல் காங்கிரஸ் கேலி செய்துள்ளது. "மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்ற மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் பாஜகவில் இல்லை. ஆதலால், அவர்களது முயற்சிகள் அனைத்தும் வீணாகும்' என திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலர் பார்த்த சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com