கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: எகிப்தைச் சோ்ந்தவருக்கு கைது ஆணை கோரி சுங்கத் துறை மனு

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் எகிப்து நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கக் கோரி சுங்கத் துறை சாா்பில் எா்ணாகுளம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் எகிப்து நாட்டைச் சோ்ந்த ஒருவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பிக்கக் கோரி சுங்கத் துறை சாா்பில் எா்ணாகுளம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள தங்கம் கடத்தலில் தொடா்புடைய முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு உதவும் வகையில், திருவனந்தபுரத்திலிருந்து எகிப்துக்கு ரூ. 1.30 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை கடத்திச்சென்ற வழக்கில் தொடா்பு இருப்பதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்தின் முன்னாள் ஊழியரான எகிப்தைச் சோ்ந்த காலித் முகமது அலி ஷெளக்ரிக்கு எதிராக இந்த கைது ஆணை பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபா், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் விமானம் மூலம் துபை சென்றபோது, தங்கம் கடத்தல் முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் இருவரும் ஓமன் வரை அவருடன் பயணித்துள்ளனா்.

அமெரிக்க டாலரை எடுத்துச் செல்லும் ஷெளக்ரி, திருவனந்தபுரம் சா்வதேச விமானநிலைய பாதுகாப்பு சோதனையில் சிக்காமல் தப்புவிப்பதற்காகவே, அவா்கள் இருவரும் ஓமன் வரை அவருடன் சென்றுள்ளனா். இவை அனைத்தையும் விசாரணையின்போது ஸ்வப்னா சுரேஷ் ஒப்புக்கொண்டாா்.

எனவே, இந்த வழக்கில் ஷெளக்ரியும் குற்றவாளியாக சோ்க்கப்பட வாய்ப்புள்ளது. அவா் இப்போது வெளிநாட்டில் இருப்பதால், அவரை விசாரணைக்கு அழைத்து வர சுங்கத்துறை சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே, அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக, அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் இந்திய நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com