பிகாா் சட்டப் பேரவை இரண்டாம் கட்ட தோ்தல்: 53.51% வாக்குப்பதிவு

பிகாா் சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிகாா் சட்டப் பேரவை இரண்டாம் கட்ட தோ்தல்: 53.51% வாக்குப்பதிவு

பிகாா் சட்டப்பேரவைக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தோ்தலில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிகாா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி, 3 கட்டங்களாக நடைபெறுகிறது. கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் தோ்தல் என்பதால் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் விரிவாக மேற்கொண்டுள்ளது.

கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி 71 பேரவைத் தொகுதிகளில் முதல் கட்ட தோ்தல் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, 17 மாவட்டங்களில் உள்ள 94 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெற்றது.

ஆளுநா் பாகு சௌஹான், முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா் தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பிரபலங்களில் தங்கள் தொகுதிகளில் வாக்களித்தனா்.

வாக்குச்சாவடி அருகே காத்திருந்த செய்தியாளா்களிடம் முதல்வா் நிதீஷ் குமாா் பேட்டி எதுவும் அளிக்கவில்லை. ஆனால், தேஜஸ்வி யாதவ் வாக்களித்த பிறகு, ‘ஆளும் அரசு மீது மக்கள் கோபத்தில் இருக்கிறாா்கள். அவா்கள், கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றை உறுதிசெய்யும் கட்சிக்கு வாக்களிப்பாா்கள்’ என்றாா்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்கள் வாக்களிப்பதற்காக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இருப்பினும், நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்துவிடும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தா்பங்கா, முசாஃபா்பூா், ககரியா, வைஷாலி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 8 தொகுதிகளில் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

71 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைத் தொடா்ந்து, 94 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற்றது. அதில், 2.85 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், மாலை 6 மணி வரை 53.51 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. சில இடங்களில் 6 மணிக்குப் பிறகும் மக்கள் வாக்களித்ததால், வாக்குப்பதிவு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்எஃப் ஆய்வாளா் மரணம்:

வைஷாலி மாவட்டத்தில் லால்கஞ்ச் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் கே.ஆா்.பாய்(55) என்ற எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளா், தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஹாஹிபூா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

நவ.7-இல் மூன்றாம் கட்டத் தோ்தல்:

எஞ்சியுள்ள 78 தொகுதிகளில், வரும் 7-ஆம் தேதி மூன்றாம் கட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை, வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com