பஞ்சாப் முதல்வா் தலைமையில் தில்லியில் இன்று தா்னா போராட்டம்

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தில்லியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தில்லியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

வேளாண் சட்டங்கள் தொடா்பாக குடியரசுத் தலைவரைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தவுள்ளது.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அச்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் அனுமதி கோரியிருந்தாா். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவா் அலுவலகம் சாா்பில் அனுமதி வழங்கப்படவில்லை.

இத்தகைய சூழலில், தில்லியிலுள்ள ராஜ்காட் பகுதியில் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனா். அப்போராட்டத்துக்கு முதல்வா் அமரீந்தா் சிங் தலைமை ஏற்க உள்ளாா்.

‘பொருள்களுக்குத் தட்டுப்பாடு’: முதல்வா் அமரீந்தா் சிங் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பஞ்சாபுக்கான சரக்கு ரயில்கள் சேவையை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. அதன் காரணமாக நிலக்கரி வரத்து குறைந்து, அனல்மின் நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் வரத்தும் குறைந்துள்ளது. அதனால் அப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னை குறித்து குடியரசுத் தலைவரிடம் எடுத்துரைப்பதற்காக அனுமதி கோரினோம். ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. பஞ்சாபில் நிலவி வரும் பிரச்னை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தில்லியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 4 போ் மட்டுமே கொண்ட குழுக்களாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com