அதிபராக யார் வெற்றி பெற்றாலும் "இந்திய-அமெரிக்க உறவு தொடர்ந்து வலுப்பெறும்'

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அல்லது ஜோ பிடன் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு மேலும் வலுப்பெறும் என்பதையே இருதரப்பு தேர்தல் பிரசார கொள்கை
அதிபராக யார் வெற்றி பெற்றாலும் "இந்திய-அமெரிக்க உறவு தொடர்ந்து வலுப்பெறும்'

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அல்லது ஜோ பிடன் யார் வெற்றி பெற்றாலும் இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு மேலும் வலுப்பெறும் என்பதையே இருதரப்பு தேர்தல் பிரசார கொள்கை ஆவணங்களும் கருத்துகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில் இந்தியாவின் சிறந்த நண்பராக உருவெடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடனான அவரது நட்பு அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இரு தலைவர்களும் பங்கேற்றுப் பேசிய கூட்டங்களிலும் அந்த நட்புறவு பிரதிபலித்தது.

ஹூஸ்டனில் 2019, செப்டம்பரில் நடைபெற்ற "ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் தனது உரையை நினைவுகூர்ந்து கடந்த செப்டம்பரில் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து எனக்கு சிறந்த ஆதரவு உள்ளது. பிரதமர் மோடி எனது நண்பர். அவர் மிகச்சிறந்த பணியைச் செய்கிறார்' என்றார்.

முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பிடனும் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொண்டிருக்கிறார். மூன்று தசாப்தங்களாக ஒரு செனட் சபை உறுப்பினராகவும், பின்னர் 8 ஆண்டுகள் துணை அதிபராகவும் அவர் இந்தியா-அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றியதிலிருந்து, இருதரப்பு வர்த்தகத்தில் 500 பில்லியன் டாலர் இலக்கு நிர்ணயிப்பது வரை இந்திய தலைமையுடன் பிடன் வலுவான உறவைக் கொண்டிருந்தார். ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அவரது நெருக்கமான வட்டத்தில் உள்ளனர்.

கடந்த ஜூலையில் நடைபெற்ற தேர்தல் நிதி திரட்டும் கூட்டத்தில் பேசிய பிடன், இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள். அந்தக் கூட்டாண்மையானது ஒரு மூலோபாய கூட்டாண்மையாகும்; நமது பாதுகாப்புக்கு அவசியமானது எனக் குறிப்பிட்டார்.

8 ஆண்டுகள் துணை அதிபராக தான் பணியாற்றியது பற்றி குறிப்பிட்ட பிடன், அமெரிக்க-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் முக்கியப் பங்கு வகித்ததைப் பெருமிதமாக சுட்டிக்காட்டினார். இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு ஒபாமா-பிடன் நிர்வாகத்தில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது. தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதேபோல் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் பிடன்.

உறவு தொடரும்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு அண்மையில் தில்லியில் நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையில் அடித்தளம் அமைக்கப்பட்டது. "இருதரப்பு உறவுக்கு இரு கட்சிகளின் ஆதரவும் உள்ளது. வெள்ளை மாளிகைக்கு எந்தக் கட்சி செல்லும் அல்லது நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டது அல்ல இது' என பேச்சுவார்த்தையின்போதும், அதன் பிறகும் இரு நாட்டு அதிகாரிகளும் கோடிட்டுக் காட்டினர்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், கரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு மற்றும் எரிசக்தியானது இருதரப்பு உறவின் இரு முக்கிய தூண்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளையில், இருதரப்பு வர்த்தகம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விசா தொடர்பான விஷயங்களில் வேறுபாடுகள் தொடர்கிறது.

டிரம்ப் நிர்வாகம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறிய ஒரே பெரிய நாடு இந்தியா. இரு நாடுகளைச் சேர்ந்த உயர்நிலை தலைவர்கள் விருப்பம் தெரிவித்த பிறகும் ஒரு சிறிய வர்த்தக ஒப்பந்தம்கூட கையெழுத்தாகவில்லை. கடந்த மூன்று தசாப்தங்களாக இரு நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகளைப் பார்க்கும்போது, பிடன் நிர்வாகத்தில்கூட இந்த வேறுபாடுகள் தொடரக் கூடும்.

இருப்பினும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகம் வேகமாக வளர வாய்ப்புள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை இந்தியா தொடரும்; மேலும், இருதரப்பு எரிசக்தி வர்த்தகத்தை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானால் ஹெச்-1பி விசா, இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரிவிதிப்பு உள்ளிட்டவற்றில் வேறுபாடுகள் தொடரக் கூடும். ஆனால், பிடன் அல்லது டிரம்ப் நிர்வாகத்தில் எந்த ஒரு பிரச்னையும் ஓர் ஒப்பந்தத்தை முறியடிக்க வாய்ப்பில்லை.

உலகில் அதிகரித்து வரும் சர்வாதிகாரத்தை முறியடிப்பதற்கும், தேர்தல் பாதுகாப்பு, மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணவும் ஓர் உலகளாவிய உச்சி மாநாட்டைக் கூட்டப் போவதாக பிடன் அறிவித்துள்ளார். அவர் அதிபராக வெற்றி பெற்றால் அந்த மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும். இதேபோல், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு எதிராக அணிதிரட்டும் வேகத்தை அதிகரித்துள்ள அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்திய செயல்படக் கூடும்.

அமெரிக்க அதிபராக யார் வெற்றி பெற்றாலும் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கும் ஒருசில உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com