பேரறிவாளனின் விடுதலை: ஆளுநர் 2 ஆண்டுகளாக முடிவெடுக்காததில் உச்சநீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனின் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்,
பேரறிவாளனின் விடுதலை: ஆளுநர் 2 ஆண்டுகளாக முடிவெடுக்காததில் உச்சநீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறையில் இருந்து வரும் பேரறிவாளனின் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவரது விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டாண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தது.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2018, செப்டம்பர் 9-இல் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
 இந்நிலையில், "தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும்' எனக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆஜராகி, "தமிழக அமைச்சரவைகூடி எடுத்த முடிவின்படி தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், ஆளுநர் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்காமல் உள்ளார்' என்றார்.
 அப்போது, "ஆளுநருக்கு நீதிமன்றம் கேட்டுக் கொள்ளும் வகையில் உள்ள சட்டம் குறித்து தெரிவியுங்கள்' என்று நீதிபதிகள் அமர்வு கேட்டது. அதற்கு அவர், "அரசமைப்புச் சட்டத்தின் 161 பிரிவின் கீழ் பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மன்னிப்பு அளிக்கக் கோரி சமர்ப்பித்த மனு மீது முடிவு எடுக்குமாறு தமிழக ஆளுநரிடம் கேட்டுக் கொள்வதற்கு அரசமைப்புச்சட்டம் 142 பிரிவின் கீழ் அதிகார வரம்பை உச்சநீதிமன்றம் பிரயோகிக்க முடியும். இதற்கு முன்னுதாரண வழக்குகள் உள்ளன' என்றார்.
 இதைத் தொடர்ந்து, "தற்போதைய நிலையில் எங்கள் அதிகாரவரம்பை செயல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரை இரு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இல்லை' என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாஸனிடம், "உச்சநீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவு ஏதும் இன்றி, ஓர் உத்தரவை பிறப்பிக்குமாறு ஆளுநரிடம் ஏன் தமிழக அரசு கேட்க முடியாது?' என்று கேள்வி எழுப்பியது.
 அதற்கு பாலாஜி ஸ்ரீநிவாஸன், "இந்த விவகாரம் பரந்துபட்ட சதி தொடர்புடையதாக உள்ளது. சிபிஐ தலைமையிலான எம்டிஎம்ஏவின் அறிக்கை ஆளுநருக்கு கிடைக்கவில்லை. அதனால், அவர் முடிவெடுக்காமல் காத்திருக்கிறார்' என்றார். அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜிடம், இதுதொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 அதற்கு அவர், "ராஜீவ் காந்தி விவகாரத்தில் பெரிய அளவிலான சதி ஏதும் உள்ளதா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார். இதையடுத்து, "இந்த விசாரணை ஏன் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசிடம் விவரம் அறிந்து தெரிவியுங்கள்' என்று நீதிபதிகள் கூடுதல் சொலிசிட்டரிடம் கூறி, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com