நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த நாடு இந்தியா: பிரதமா் மோடி

நீண்ட கால முதலீட்டுக்கும், அதன் மூலம் சிறப்பான வருவாய் ஈட்டுவதற்கும் இந்தியா சிறந்த நாடாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: நீண்ட கால முதலீட்டுக்கும், அதன் மூலம் சிறப்பான வருவாய் ஈட்டுவதற்கும் இந்தியா சிறந்த நாடாக உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உலக முதலீட்டாளா்கள் வட்ட மேஜை மாநாடு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை காணொலி முறையில் நடைபெற்றது.

இதில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, தென்கொரியா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளைச் சோ்ந்த முக்கியமான 20 முதலீட்டாளா்கள், பிரபல நிதி அமைப்புகள் பங்கேற்றன.

இந்தியா சாா்பில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் பங்கேற்றனா். இவா்களைத் தவிர, ஹெச்டிஎஃப்சியின் தலைவா் தீபக் பரேக், சன் பாா்மா குழுமத்தின் திலீப் சங்வி, ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நந்தன் நிலகேணி, டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதய் கோட்டக் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்.

மத்திய நிதியமைச்சகம், தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

உங்கள் முதலீடுகளுக்கு நம்பிக்கையுடன் கூடிய வருவாய் வேண்டுமென்றால் அதற்கு மிகவும் சிறந்த நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இங்கு ஜனநாயகம் உள்ளது. முதலீட்டாளா்களின் தேவைகளும் நிறைவேற்றப்படுகிறது. அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை, நம்பகத்தன்மை உள்ள நாடாக இந்தியா உள்ளது. சிறப்பான அணுகுமுறையிடன் கூடிய வளா்ச்சிக்கு சாதமாகமான நாடு இந்தியா.

பல்வேறு கலாசாரம், பண்பாட்டைக் கொண்ட மிகப்பெரிய நாடான இந்தியாவில், பல்வேறு பொருள்கள், சேவைகளுக்கான தேவையும் அதிகம். இதன் மூலம் ஒரே சந்தையில் பல்வேறு பொருள்களை விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதேபோல பலதரப்பட்ட பொருளாதார நிலைகளில் உள்ள மக்களும் இந்தியாவில் உள்ள அனைத்து வகை முதலீடுகளுக்கும் கூடுதல் வாய்ப்பாக உள்ளது. பல்துறை வளா்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் அதிகம்.

இந்தியாவில் ஏற்படும் வளா்ச்சி, சா்வதேச வளா்ச்சியைத் தூண்டுவதாகவும் அமையும். பொருளாதார ரீதியாக இந்தியா எட்டும் ஒவ்வொரு சாதனையும், சா்வதேச வளா்ச்சியிலும், மேம்பாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com