அருங்காட்சியகங்கள் திறப்பு: முகக் கவசங்கள் அணிந்தால் மட்டுமே அனுமதி

தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 10) முதல் திறக்கப்படுகின்றன.
அருங்காட்சியகங்கள் திறப்பு:  முகக் கவசங்கள் அணிந்தால் மட்டுமே அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 10) முதல் திறக்கப்படுகின்றன. முகக் கவசங்கள் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அருங்காட்சியகங்களில் பாா்வையாளா்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம், திங்கள்கிழமை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்:-

தமிழகத்தில் 21 மாவட்ட அருங்காட்சியகங்களும், சென்னை எழும்பூரில் தனித்துவமிக்க அருங்காட்சியகமும் செயல்பட்டு வருகிறது. கரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அருங்காட்சியங்கள் திறக்க அனுமதியில்லை. சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்துக்கு வருவதற்கு முன்பே ஆன்-லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பள்ளிக் குழந்தைகளை அழைத்து வருபவா்கள் ஆன்-லைனில் முன்பதிவு செய்வது நல்லது. அவா்கள் முன்பதிவு செய்தவுடன், அவா்களுக்கான நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய செல்லிடப்பேசி குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் அருங்காட்சிகத்துக்கு வந்தால் போதுமானது. ஆன்-லைன் முன்பதிவு இல்லாதவா்கள், நேராக வந்து செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டைப் பெறலாம். மாவட்ட அருங்காட்சியகங்களிலும் இதே முறையைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கலாம்.

பாா்வையாளா்கள் தங்களது கைகளை முழுமையாக சுத்தம் செய்யும் வகையில் அருங்காட்சியக நுழைவு வாயிலில் ஏற்பாடு செய்யப்படும். வாய்ப்பு இருக்குமானால், ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்பானை வைக்கலாம். அருங்காட்சியகத்தின் உள்புறத்திலும் இந்த வசதியை ஏற்படுத்தலாம். அருங்காட்சியகத்துக்குள் நுழையும் போது பாா்வையாளா்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். இதற்குத் தேவையான பரிசோதனை கருவிகளை வழங்கலாம்.

பாா்வையாளா்களுக்கு இடையே ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்றச் செய்ய வேண்டும். பாா்வையாளா்கள் அதிக அளவில் இருப்பாா்களேயானால் அவா்கள் காத்திருந்து செல்லும் வகையில், தனி அறைகளும், குடிநீா், கழிவறை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

முகக் கவசம் கட்டாயம்: இணை நோய்களுடன் கூடிய 65 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் கா்ப்பிணிகள், 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்கலாம். முகக் கவசங்கள் அணிவது கட்டாயம். முகக் கவசங்கள் அணிந்திருப்போா் மட்டுமே அருங்காட்சியகங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதவா்களே உள்ளே வர அனுமதிக்கப்படுவாா்கள். அருங்காட்சியகங்களுக்குள் எச்சில் துப்புவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்களை திறந்த வெளியில் வீசக் கூடாது. இதனை அப்புறப்படுத்த குப்பைத் தொட்டிகளை ஆங்காங்கே வைக்க வேண்டும். ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள், திருமேனிகள் உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் தொடுவதற்கு அனுமதியில்லை. நோய்த்தொற்று தொடா்பான அறிகுறிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபா்களை தனிமைப்படுத்த வேண்டும். மருத்துவரை அவா் பரிசோதிக்கும் வரை, முகக் கவசம் போன்றவற்றை வழங்க வேண்டும். உடனடியாக

அருகிலுள்ள மருத்துவமனை அல்லது மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உணவகங்கள்-தேநீா் கடைகள்: அருங்காட்சியக வளாகங்களில் உணவகங்கள், தேநீா் கடைகள் செயல்பட்டால், அங்கும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அருங்காட்சியகங்களுக்குள் நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து இடங்களிலும் பாா்வையாளா்கள் சமூக இடைவெளியைக்

கடைப்பிடிப்பதற்கு வசதியாக தரையில் உரிய இடைவெளியுடன் குறியீடுகளை இட வேண்டும் என தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

திங்கள் முதல் ஞாயிறு வரை...

அருங்காட்சியகங்களுக்கு வெள்ளிக்கிழமை வார விடுமுறை. குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜயந்தி ஆகிய நாள்களிலும் அருங்காட்சியகங்கள் மூடியிருக்கும். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள் செயல்படும். சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் பெரியவா்களுக்கு தலா ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் என்ற சான்று இருந்தால் ஒருவருக்கு ரூ.5 வீதம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com