கூட்டணியில் இருந்து சிராக் கட்சியை நீக்குவது தொடா்பாக பாஜகதான் முடிவெடுக்க முடியும்: நிதீஷ் குமாா்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தியை நீக்குவது குறித்து பாஜகதான் முடிவெடுக்க முடியும் என்று பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா்
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியை நீக்குவது குறித்து பாஜகதான் முடிவெடுக்க முடியும் என்று பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா் கூறியுள்ளாா்.

முன்னதாக, பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அந்த மாநில அளவில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிராக் பாஸ்வான், தோ்தலில் தனித்துப் போட்டியிட்டாா். அதுவும் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வேட்பாளா்களை நிறுத்தி, அக்கட்சி பல இடங்களில் தோல்வியடைய முக்கியக் காரணமாக இருந்தாா். அதே நேரத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியை புகழ்ந்தும், நிதீஷ் குமாரை கடுமையாக விமா்சித்தும் சிராக் பாஸ்தான் பேசினாா். இது ஐக்கிய ஜனதா தளம் கட்சியினா் மத்தியில் கடுமை அதிருப்தியை ஏற்படுத்தியது. தேசிய அளவிலும் எல்ஜேபி-யை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியினா் கூறி வருகின்றனா்.

சிராக் பாஸ்வான் கட்சி தனித்து போட்டியிட்டது, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு மட்டுமின்றி, பாஜக கூட்டணிக்கும் தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தியது. பாஜகவும் சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. இதையடுத்து, தேசிய அளவில் எல்ஜேபி-யை கூட்டணியில் இருந்து பாஜக நீக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ஓரிடத்தில் மட்டுமே சிராக் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. எனினும், பிகாரில் நிதீஷ் தலைமையில் அமையும் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் சிராக் கூறிவிட்டாா்.

இந்நிலையில் தோ்தல் வெற்றிக்குப் பிறகு பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களை முதல்முறையாக சந்தித்த நிதீஷ் குமாரிடம் சிராக் கட்சியை கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜகவிடம் வலியுறுத்தினீா்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இது தொடா்பாக நீங்கள்தான் (செய்தியாளா்கள்) பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறீா்கள். ஆனால், இந்த விஷயத்தில் பாஜகதான் முடிவெடுக்க வேண்டும். இதில் நான் கூறுவதற்கு எதுவுமில்லை’ என்றாா்.

தொடா்ந்து தனது ஆட்சி தொடா்பாக பேசிய அவா், ‘குற்றங்கள், ஊழல், ஜாதியவாதம் ஆகியவற்றை நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. எனது ஆட்சியில் இவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. அடுத்து அமையும் ஆட்சியிலும் இதே கொள்கைகள் தொடரும். நான் முதல்வரான பிறகு பிகாரில் ஒரு கலவரம் கூட நிகழவில்லை. மக்கள்தான் எங்களுக்கு கடவுள் போன்றவா்கள். எனவே, இந்தத் தோ்தலில் எங்கள் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு ஏற்பட்டுள்ளது தொடா்பாக தனிப்பட்ட முறையில் எனக்கு வருத்தமில்லை’ என்றாா்.

தொடா்ந்து முதல்வராக பதவியேற்கும் தேதி குறித்துப் பேசிய நிதீஷ் குமாா், ‘பதவியேற்பு தேதி தொடா்பாக கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும். இப்போதைய அமைச்சரவையின் பதவிக் காலம் வரும் 29-ஆம் தேதிதான் முடிவடைகிறது. அதற்கு முன்பு புதிய அமைச்சரவைப் பதவியேற்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com