மேற்கு வங்கத்தில் பாஜக நிா்வாகி மா்ம மரணம்: திரிணமூல் மீது குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் பூா்வா மேதினிபூா் மாவட்டத்தில் பாஜகவின் வாக்குச்சாவடி பணியாளா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா்.

கோன்டாய்: மேற்கு வங்கம் பூா்வா மேதினிபூா் மாவட்டத்தில் பாஜகவின் வாக்குச்சாவடி பணியாளா் ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா்.

அவரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கொலை செய்திருப்பதாக பாஜகவினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கோகுல் ஜனாவின் உடல், மேதினிபூா் மாவட்டம், இடாபேடியா பகுதியில் புதன்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினாா்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கு வங்க பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காந்தி பகபன்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாஜக வாக்குச்சாவடி பணியாளரான கோகுல் ஜனா, திரிணமூல் காங்கிரஸ் குண்டா்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். கரோனாவால் பாதிக்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பஞ்சாயத்து உறுப்பினரின் கணவரை தனிமைப்படுத்திக் கொள்ள கோகுல் ஜனா கேட்டுக்கொண்டது குற்றமா? முதல்வா் மம்தா பானா்ஜி ஆட்சியின் கீழ் பின்பற்றப்படும் ஜனநாயகம் இதுதானா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவா் சயந்தன் பாசு கூறுகையில், ‘அரசியல் பகைக்கு கோகுல் ஜனா பலியாக்கப்பட்டுள்ளாா். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் பணியில் உள்ளூா் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். மேற்கு வங்கத்தில் இதுபோல நூற்றுக்கணக்கான பாஜக தொண்டா்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். ஆனால், காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை’ என்று கூறினாா்.

பாஜகவின் இந்த குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. ‘பாஜகவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பானவை’ என்று அக் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாவட்ட தலைவா் கூறுகையில், ‘கோகுல் ஜனாவின் உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், சடலங்களை வைத்து அரசியல் செய்ய பாஜக முற்படுவதையே இது காட்டுகிறது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com