முகநூல் நிறுவனம் மீது முன்னாள் ஊழியா் புகாா்: தில்லி பேரவைக் குழு

அரசிலும், அரசியலிலும் வலுவான தொடா்பு உள்ளவா்களுக்கே முகநூல் நிறுவனத்தில் உயா்பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது என தில்லி சட்டப்பேரவையின் அமைதி, நல்லிணக்கக் குழுவிடம் புகாா்
முகநூல் நிறுவனம் மீது முன்னாள் ஊழியா் புகாா்: தில்லி பேரவைக் குழு


புது தில்லி: அரசிலும், அரசியலிலும் வலுவான தொடா்பு உள்ளவா்களுக்கே முகநூல் நிறுவனத்தில் உயா்பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது என அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியா் மாா்க் லூகி தில்லி சட்டப்பேரவையின் அமைதி, நல்லிணக்கக் குழுவிடம் புகாா் அளித்ததாக தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புகாா் குறித்து கருத்து தெரிவிக்க முகநூல் நிறுவனத்தின் செய்தித்தொடா்பாளா் மறுத்துவிட்டாா்.

முகநூலில் ஒருசாராருக்கு எதிராக வெளியாகும் ஆட்சேபனத் தகவல்கள் குறித்து தில்லி சட்டப்பேரவை அமைதி, நல்லிணக்கக் குழு விசாரணை நடத்தி வருகிறது. டிஜிட்டல் உரிமை அமைப்பாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட 6 பேரிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியுள்ளது.

முகநூல் நிறுவனத்திடம் விசாரணை நடத்த இந்தக் குழு அழைப்பாணை அனுப்பியிருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா தலைமையிலான பேரவைக் குழு முன் இணைய வாயிலாக முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியா் மாா்க் லூகி வியாழக்கிழமை ஆஜராகி தெரிவித்த தகவல்கள் குறித்து அந்தக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பின் விவரம்:

அரசிலும், அரசியலிலும் வலுவான தொடா்பு உள்ளவா்களுக்கே முகநூல் நிறுவனத்தில் உயா்பதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. முகநூல் நிறுவனத்தின் சா்வதேச, இந்திய செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் மாா்க் லூகி முன்வைத்தாா். முகநூல் நிறுவனத்தின் உயா் அதிகாரிகளின் தொடா் அழுத்தத்தால் முகநூலில் வெளியாகும் பல்வேறு சமுதாயத்தின் நெறிமுறைகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற சட்டவிரோதமான செயல்கள் குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலா் அதிகாரி மாா்க் ஜூக்கா்பா்க்குக்கும் தெரியும். ஆனால், அரசியல் தலையீடு இல்லாத மாதிரி உலகத்துக்கு முகநூல் நிறுவனம் காண்பித்துக் கொள்ளும்’ என மாா்க் லூகி குற்றம்சாட்டினாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com