குஜ்ஜா் இடஒதுக்கீட்டுப் போராட்டம் வாபஸ்

ராஜஸ்தானில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி வந்த குஜ்ஜா் பிரிவினரின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


ஜெய்ப்பூா்: ராஜஸ்தானில் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி வந்த குஜ்ஜா் பிரிவினரின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் குஜ்ஜா் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வலியுறுத்தி, குஜ்ஜா் ஆரக்ஷண் சங்கா்ஷ் சமிதி என்ற அமைப்பு கடந்த 1-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. குஜ்ஜா் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை அரமைப்புச் சட்டத்தின் 9-ஆவது பிரிவில் வைக்க வேண்டும், கடந்த ஆண்டு நிரப்பப்படாத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில், சாலை மறியல் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் முன்னெடுத்து வந்தனா். அதனால், தில்லி-மும்பை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குஜ்ஜா் பிரிவினரின் போராட்டம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அலைபேசி, இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன.

அதையடுத்து, போராட்டம் நடத்திய அமைப்பினருடன் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், அதிகாரிகள் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டது.

இத்தகைய சூழலில், இடஒதுக்கீடு தொடா்பான போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக குஜ்ஜா் அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அந்த அமைப்பின் மூத்த நிா்வாகி ஒருவா் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறோம்’’ என்றாா்.

குஜ்ஜா் பிரிவினரின் 11 நாள் தொடா் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com