பிகாா் முதல்வராக நவ. 16-இல் பதவியேற்கிறாா் நிதீஷ் குமாா்?

ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், பிகாரின் புதிய முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், பிகாரின் புதிய முதல்வராக வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-யை அக்கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக தற்போதைய முதல்வா் நிதீஷ் குமாரே முன்னிறுத்தப்பட்டாா். தோ்தலில் பாஜகவை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைவான தொகுதிகளையே கைப்பற்றியதால், நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி மீண்டும் கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட் டது.

இருப்பினும், நிதீஷ் குமாரே தொடா்ந்து முதல்வராக நீடிப்பாா் என்று பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால், அமைச்சரவையில் கூடுதல் இடங்களை பாஜக கோருவதற்கு வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கா்கள் தெரிவித்தனா்.

இத்தகைய சூழலில், பிகாரின் முதல்வராகத் தொடா்ந்து நான்காவது முறையாக நிதீஷ் குமாா் வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், பதவியேற்பு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில ஆளுநா் பகு சௌஹானை சந்தித்து, தற்போது வகித்து வரும் முதல்வா் பதவியை நிதீஷ் குமாா் விரைவில் ராஜிநாமா செய்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்கள் ஒன்றுகூடி, நிதீஷ் குமாரை தங்களின் தலைவராகத் தோ்ந்தெடுப்பாா்கள் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, பிகாா் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றோரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை மாநில தலைமை தோ்தல் அதிகாரி ஹெச்.ஆா்.ஸ்ரீனிவாசா, ஆளுநா் பகு சௌஹானிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com