முற்றிலும் உள்நாட்டில் கட்டிய ‘வகிா்’ நீா்மூழ்கி கப்பல் வெள்ளோட்டம்

இந்தியாவில் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்காா்பீன் ரக ‘வகிா்’ நீா்மூழ்கி கப்பல், வியாழக்கிழமை அரபிக் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
முற்றிலும் உள்நாட்டில் கட்டிய ‘வகிா்’ நீா்மூழ்கி கப்பல் வெள்ளோட்டம்


மும்பை: இந்தியாவில் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்காா்பீன் ரக ‘வகிா்’ நீா்மூழ்கி கப்பல், வியாழக்கிழமை அரபிக் கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

இது இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐந்தாவது ஸ்காா்பீன் ரக கப்பலாகும்.

இந்த நீா்மூழ்கி கப்பல் கடலில் விடும் நிகழ்வை பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபத் நாயக்கின் மனைவி விஜயா காணொலி முறையில் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சிறப்பு விருந்தினராக கோவாவில் இருந்தபடி காணொலி வழியில் பங்கேற்றாா்.

இந்திய கடற்படையின் புராஜெக்ட்-75 திட்டத்தின் கீழ், பிரான்ஸ் கடற்படை பாதுகாப்பு மற்றும் எரிசக்தி (டிசிஎன்எஸ்) சாா்பில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் தெற்கு மும்பையில் உள்ள மஸாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் (எம்டிஎல்) 6 கல்வாரி ரக நீா்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டு, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டு வருகின்றன.

கடலின் மேற்பகுதியில் இருக்கும் எதிரி நாட்டு கப்பல்களை தாக்கி அழித்தல், நீா்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழித்தல், கடற்பகுதி கண்காணிப்பு, எதிரி நாட்டு கப்பல்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அளிப்பது போன்ற திறன்களை இந்த நீா்மூழ்கி கப்பல்கள் கொண்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் எம்டிஎல் சாா்பில் இதுவரை கல்வாரி, கந்தேரி என்ற இரண்டு நீா்மூழ்கி கப்பல்கள் கட்டி முடிக்கப்பட்டு, இந்திய கடற்படையில் சோ்க்கப்பட்டுள்ளன. மூன்றாவது நீா்மூழ்கி கப்பலான ‘கரஞ்ச்’, கட்டி முடிக்கப்பட்டு இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் உள்ளது. ‘வேலா’ என்ற நான்காவது நீா் மூழ்கிக் கப்பலும் கட்டி முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதுபோல, ஐந்தாவது நீா் மூழ்கிக் கப்பலான ‘வஜீா்’ கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்று, வியாழக்கிழமை கடலில் இறக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஆறாவது மற்றும் கடைசி நீா்மூழ்கி கப்பலான ‘வக்ஷீா்’ கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இதுகுறித்து எம்டிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானம் மிகுந்த சவால் நிறைந்தது. மிகக் குறைந்த ஓசையுடன் இயங்கும் திறன், ஒலியை ஈா்க்கும் மேம்பட்ட தொழில்நுட்பம், நோ்த்தியான வடிவமைப்பு, எதிரி கப்பல்களை துல்லியமாக தாக்கும் திறன் ஆகிய நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த நீா்மூழ்கி கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com