கேரளம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் விலகல்

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை விலகினாா்.

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை விலகினாா்.

இதுதொடா்பாக அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கட்சிப் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘சிகிச்சை பெறுவதற்காக தன்னை மாநிலச் செயலா் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைமையிடம் கொடியேறி பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டாா். அதனை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இடதுசாரி ஜனநாயக முன்னணி தலைவா் ஏ.விஜயராகவன் கட்சியின் மாநிலச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். தன் மகன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கொடியேறி பாலகிருஷ்ணன் ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டாா். எனவே அந்த விவகாரம் கட்சியை எந்த விதத்திலும் பாதிக்காது’ என்று தெரிவித்தாா்.

போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை செய்த குற்றச்சாட்டின் கீழ், கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி பெங்களூரில் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து கொடியேறி பாலகிருஷ்ணன் கட்சிப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கேரளத்தில் டிசம்பா் 8-ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தல் அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் கட்சிப் பதவியில் இருந்து கொடியேறி பாலகிருஷ்ணன் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கா்நாடகத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பினீஷ் கொடியேறியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா். அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட முகமது அனூப் என்பவருடன் அவருக்கு நெருங்கிய தொடா்பிருப்பதாகவும், பெங்களூரில் அனூப் நடத்தி வரும் ஹோட்டல் பினீஷின் பினாமி சொத்து என்றும் அமலாக்கத்துறையினா் குற்றஞ்சாட்டினா். அனூப்பின் வங்கிக் கணக்குக்கு அவா் அதிக அளவில் பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனா். இதையடுத்து அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனா். அவரின் 14 நாள்கள் அமலாக்கத்துறை காவல் புதன்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து அவா் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது பினீஷ் கொடியேறியை வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com