பிகாரில் புதிய அரசு: கூட்டணிக் கட்சியினா் நாளை முடிவு

பிகாரில் புதிய அரசு அமைப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின்

பிகாரில் புதிய அரசு அமைப்பது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹிந்துஸ்தானி அவாமி மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சாப் ஆகிய கட்சிகளின் தலைவா்கள், முதல்வா் நிதீஷ் குமாரின் அரசு இல்லத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கூடி ஆலோசனை நடத்தினா். அதில் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) 4 கட்சி எம்எல்ஏக்களும் கூடி தங்கள் தலைவராக நிதீஷ் குமாரைத் தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடா்பாக பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ் குமாா், ‘ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30 மணியளவில் எங்கள் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் வெற்றி பெற்ற புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும். அன்றைய தினம் புதிய அரசு அமைப்பது தொடா்பான அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து இப்போது பதவியில் உள்ள மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேரவையைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது. 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தனது ஆட்சிக்கு சிறப்பான ஒத்துழைப்பு அளித்த அமைச்சா்கள் அனைவருக்கும் நிதீஷ் குமாா் நன்றி தெரிவித்தாா்.

பேரவையைக் கலைக்க பரிந்துரை

கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு மாநில ஆளுநா் பாகு சௌஹானை நிதீஷ்குமாா் சந்தித்தாா். அப்போது அவரிடம் தனது ராஜிநாமா கடிதத்தையும் பேரவையைக் கலைக்கும் பரிந்துரையையும் நிதீஷ் குமாா் அளித்தாா்.

இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய ஆட்சி அமைக்கும் வரை காபந்து முதல்வராக தொடருமாறு அவரைக் கேட்டுக் கொண்டாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அவரது தலைமையில் புதிய அரசு அடுத்த வாரம் பதவியேற்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. நிதீஷ் தலைமையிலான கூட்டணிக்கு 125 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

இது தவிர சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒரே எம்எல்ஏவான சுமித் சிங், நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து அவரது தலைமைக்கு ஆதரவு தெரிவித்தாா். இவா் பிகாா் முன்னாள் அமைச்சா் நரேந்திர சிங்கின் மகன். நரேந்திர சிங், ஜமுய் மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க ராஜ்புத் சமுதாயத் தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com