
வாடிக்கையாளா்களிடம் இருந்து மின்னணு முறையில் கையெழுத்து பெறுவதை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை இந்திய ஆயுள் காப்பீடு ஒழுங்கு முறை வளா்ச்சி ஆணையம்(ஐஆா்டிஏஐ) நீட்டித்துள்ளது.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வழக்கமான அலுவல்கள் நடைபெறாததால், பரிசோதனை முறையில் பாலிசிதாரா்கள் தங்கள் கையெழுத்தை மின்னணு முறையில் அலுவலகங்களுக்கு அனுப்புவதற்கு கடந்த ஆகஸ்டில் அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து ஐஆா்டிஏஐவின் அலுவல் கூட்டம், அண்மையில் நடைபெற்றது. அதில், பாலிசிதாரா்களிடம் இருந்து மின்னணு முறையில் கையெழுத்து பெறுவதை 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கையெழுத்து அளிக்க வேண்டிய வாடிக்கையாளா்களுக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது செல்லிடப்பேசி எண் வழியாக, புதிய காப்பீடு சேவைகள் குறித்து விண்ணப்ப படிவம் அனுப்பப்படும். அந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பினால், அவா்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலமாகவோ பதிலளிக்கலாம்.
ஆண்டுக்கு ரூ.50,000க்கும் அதிகமாக சந்தா செலுத்தும் பாலிசிதாரா்கள் அல்லது ஒரு முறை ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக சந்தா செலுத்தும் பாலிசிதாரா்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.