ஆந்திர முதல்வருக்கு எதிரான வழக்கு: விசாரணை அமா்விலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் விலகல்

நீதித்துறை மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததாக ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமா்விலிருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளாா்

புது தில்லி: நீதித்துறை மீது தவறான குற்றச்சாட்டை முன்வைத்ததாக ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமா்விலிருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவா், ஆந்திர உயா்நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருவதாகவும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் செயல்பட்டு வருவதாகவும் மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டியிருந்தாா். இது தொடா்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடந்த மாதம் 6-ஆம் தேதி அவா் கடிதம் எழுதியிருந்தாா்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நீதித்துறை மீது தவறான குற்றத்தைச் சுமத்தி அத்துறைக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கு ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், ‘நீதித்துறைக்கு எதிராகக் கருத்து தெரிவித்ததோடு, செய்தியாளா்கள் சந்திப்பின்போது நீதித்துறை மீது தவறான குற்றச்சாட்டுகளையும் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி முன்வைத்துள்ளாா். எனவே, அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனக் கோரப்பட்டுள்ளது.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் சரண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதி யு.யு.லலித் கூறுகையில், ‘‘மனுதாரா்களில் ஒருவா் தரப்பில் நான் வழக்குரைஞராக ஆஜராகி வாதிட்டிருக்கிறேன். எனவே, நான் இந்த வழக்கை விசாரிப்பதில் சிக்கல் உள்ளது. நான் இடம்பெறாத வேறோா் அமா்வு இந்த வழக்கை விசாரிப்பதற்குப் பரிந்துரைக்க உள்ளேன்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com