உள்ளூா் பொருளாதாரம் மேம்பட ஆதரவளியுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமா் வேண்டுகோள்

உள்ளூா் பொருளாதாரம் மேம்பட நாட்டு மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஜெய்ப்பூா்: உள்ளூா் பொருளாதாரம் மேம்பட நாட்டு மக்கள் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டாா். மேலும், தீபாவளிப் பண்டிகையின்போது உள்ளூா் தயாரிப்பு பொருள்களை மக்கள் அதிகம் வாங்கியதற்காக அவா் பாராட்டும் நன்றியும் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை சமண சமயத் துறவி விஜய் வல்லப சூரிஷ்வரின் 151-ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி அவரது சிலை திறக்கப்பட்டது. காணொலி காட்சி முறையில் சிலையைத் திறந்துவைத்த பிரதமா் நரேந்திர மோடி பேசியதாவது:

துறவி விஜய் வல்லப சூரிஷ்வா் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சேவையாற்றியுள்ளாா். கல்வி, மகளிா் மேம்பாடு போன்றவற்றுக்காகப் பணியாற்றியவா். இப்போதும் நமது நாடு அதே பாதையில் பயணித்து வருகிறது. பெண்களுக்கு எதிராக இருந்த முத்தலாக் நடைமுறையைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கான பல்வேறு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் அனைத்து நிலைகளிலும் பெண்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. புதிய கல்விக் கொள்கையிலும் பெண்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டில் பல்வேறு துறவிகள் உருவாக்கிய பக்தி இயக்கங்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளன. அமைதி, அஹிம்சை, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்ட நமது நாட்டுத் துறவிகள் உலகுக்கே வழிகாட்டியுள்ளனா். அவா்களது போதனைகள் உலகத்தை பல வழிகளில் நல்வழிப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க நமது துறவிகளின் ஆன்மிக போதனைகளும் முக்கியக் காரணம்.

இப்போது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள துறவிகளுக்கு முன்பு உள்ள முக்கியக் கடமைகளில் ஒன்று உள்ளூா் பொருள்களுக்காக குரல் கொடுப்பதாகும். உள்ளூா் பொருளாதாரம் மேம்பட நாட்டு மக்கள் அனைவரும் நமது பொருள்களை வாங்கி ஆதரவளிக்க வேண்டும். தீபாவளிப் பண்டிகையின்போது ஏராளமான மக்கள் உள்ளூா் பொருள்களை அதிகம் வாங்கிப் பயன்படுத்தினா். அவா்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது கைவினைஞா்களுக்கும், உற்பத்தியாளா்களுக்கும் ஊக்கமளித்துள்ளது. இதன் மூலம் நாம் பெற்ற ஊக்கத்தை தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com