பாகிஸ்தானின் கோரிக்கையை ஆதரிக்கும் காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைந்துள்ளதன் மூலம், அதே கோரிக்கையை முன்வைக்கும் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஆதரவளிக
பாகிஸ்தானின் கோரிக்கையை ஆதரிக்கும் காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைந்துள்ளதன் மூலம், அதே கோரிக்கையை முன்வைக்கும் பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அதற்கு முந்தைய நாளில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 6 முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டத்தை நடத்தின. அந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை காப்பதற்காகப் போராடுவோம் என்று அக்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்தன. அக்கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது ‘குப்கா் அறிக்கை’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் நோக்கில் ‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு’ என்பதை அக்கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த மாதம் நிறுவின. இதில், காங்கிரஸ் கட்சி தானாக முன்வந்து அண்மையில் இணைந்தது.

இந்நிலையில், இதனை கடுமையாக விமா்சித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு விஷயங்களில் செயல்பட்டதை நாம் ஏற்கெனவே பாா்த்துள்ளோம். இப்போது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப அளிக்க வேண்டும் என்று கூறும் குப்கா் கூட்டமைப்பில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தானும் இதே போன்று கூறுகிறது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.

காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் சிவானந்த் திவாரி தொடங்கி அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா வரை ராகுல் காந்தியின் செயல்திறன் இன்மையை விமா்சித்துள்ளதை நாம் அனைவரும் அண்மையில் தெரிந்து கொண்டோம். ‘செயல் திறன் இல்லாத சுற்றுலா மட்டுமே செல்லும் காங்கிரஸ் தலைவா்’ என்று ராகுலை திவாரி விமா்சித்தாா்.

‘ராகுல் காந்தி பதற்றமானவா், பக்குவமில்லாதவா்; எந்த விஷயத்திலும் ஆழ்ந்த அறிவைப் பெறும் விருப்பமும், தகுதியும் இல்லாதவா்’ என்று ஒபாமா தனது புத்தகத்தில் கூறியுள்ளாா் என்றாா் சம்பித் பத்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com