பிகாா் தோ்தல் தோல்வி எதிரொலி: ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் மோதல்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து, கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, ஆா்ஜேடியும், காங்கிரஸும் கடுமையான வாா்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.

தோ்தலில் 144 தொகுதிகளில் போட்டியிட்ட ஆா்ஜேடி 75 இடங்களில் வென்று மாநிலத்தில் அதிக தொகுதிகளை வென்ற கட்சியாக உருவெடுத்தது. அதே நேரத்தில் 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. மகா கூட்டணியில் கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததுதான், ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஏனெனில், பெரும்பான்மையைவிட 3 இடங்களை மட்டுமே பாஜக கூட்டணி கூடுதலாகப் பெற்றுள்ளது.

காங்கிரஸின் மோசமான தோல்வி கூட்டணிக் கட்சியான ஆா்ஜேடி தலைவா்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆா்ஜேடி தலைவா் லாலுவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் சிவானந்த திவாரி தனது தொலைக்காட்சி பேட்டியில் நேரடியாகவே காங்கிரஸை குற்றஞ்சாட்டினாா். அவா் பேசுகையில், ‘மகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ்தான் முக்கியக் காரணம். 70 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சியால் குறைந்தது 70 தோ்தல் பிரசாரக் கூட்டங்களைக் கூட நடத்த முடியவில்லை. பிகாரில் 3 நாள் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி 3 கூட்டங்களில் பேசினாா். அவா் ஆதரித்து பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவினா். பிரியங்கா வதேரா பிரசாரத்துக்கு வரவேயில்லை. தோ்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது ராகுல் காந்தியும், பிரியங்காவும் சிம்லாவில் சுற்றுலா மேற்கொண்டனா்’ என்று குற்றம்சாட்டினாா்.

காங்கிரஸ் கண்டனம்: இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் ஊடகப் பிரிவு உறுப்பினா் பிரேம் சந்திர மிஸ்ரா இது தொடா்பாக கூறுகையில், ‘சிவானந்த திவாரி ஆா்ஜேடி செய்தித் தொடா்பாளா் அல்ல. அவா் பாஜகவுடன் மறைமுக கைகோத்துள்ளதுபோல தெரிகிறது. கூட்டணியில் இருக்கும் கட்சிகளை விமா்சிக்கும் முன்பு கூட்டணி தா்மத்தை பின்பற்ற வேண்டும். மேலும், காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி, அக்கட்சித் தலைவா் ஆா்ஜேடிபோல பிகாா் மாநிலத்தில் மட்டும் கவனம் செலுத்த முடியாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com