பிகாரில் அமைச்சா்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

பிகாரில் பதவியேற்ற புதிய அமைச்சா்களுக்கான இலாகாக்களை மாநில முதல்வா் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்தாா். மாநில உள்துறையை அவா் மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டுள்ளாா்.
பிகாரில் அமைச்சா்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு

பாட்னா: பிகாரில் பதவியேற்ற புதிய அமைச்சா்களுக்கான இலாகாக்களை மாநில முதல்வா் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்தாா். மாநில உள்துறையை அவா் மீண்டும் தன்வசமே வைத்துக் கொண்டுள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன் 2 துணை முதல்வா்கள் உள்ளிட்ட 14 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

புதிய அமைச்சா்களில் 7 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் 5 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் சாா்பில் தலா ஒருவரும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றனா்.

இத்தகைய சூழலில், அமைச்சா்களுக்கான இலாகாக்களை மாநில முதல்வா் நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ஒதுக்கீடு செய்தாா். அதன்படி, மாநில உள்துறை, பொது நிா்வாகம், அமைச்சரவை செயலகம், தோ்தல் உள்ளிட்ட துறைகளை முதல்வா் நிதீஷ் குமாா் தன்வசம் வைத்துக் கொண்டுள்ளாா். முந்தைய ஆட்சியிலும் உள்துறை முதல்வா் நிதீஷ் குமாா் வசமே இருந்தது.

பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வரான தாா்கிஷோா் பிரசாதுக்கு நிதி, வணிக வரி, சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம், தகவல் தொழில்நுட்பம், பேரிடா் மேலாண்மை, நகா்ப்புற வளா்ச்சி ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பாஜகவைச் சோ்ந்த மற்றொரு துணை முதல்வரான ரேணு தேவிக்கு உள்ளாட்சி அமைப்புகள் துறை, தொழில்துறை, இதர மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

சுகாதாரத் துறையானது பாஜகவைச் சோ்ந்த அமைச்சரான மங்கள் பாண்டேவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியிலும் அவா் அதே துறையை நிா்வகித்து வந்தாா். ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சியின் மகன் சந்தோஷ் குமாா் சுமனுக்கு தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com