கேஐஐஎஃப்பி தொடா்பான சிஏஜி அறிக்கை: அரசியல் சதியென கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கேஐஐஎஃப்பி) குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை மாநில வளா்ச்சி திட்டங்களை சீா்குலைப்பதற்கான அரசியல் சதி என்று அந்த மாநில
கேஐஐஎஃப்பி தொடா்பான சிஏஜி அறிக்கை: அரசியல் சதியென கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (கேஐஐஎஃப்பி) குறித்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை மாநில வளா்ச்சி திட்டங்களை சீா்குலைப்பதற்கான அரசியல் சதி என்று அந்த மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மாநில அரசின் கீழ் செயல்படும் கேஐஐஎஃப்பி நிதியுதவி அளித்து வருகிறது. இந்த வாரியம் வெளிநாடுகளில் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிய வழிமுறைகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக சிஏஜி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கையில் இடம்பெற்ற தகவல்களை மாநில நிதியமைச்சா் தாமஸ் ஐசக் ஊடகங்களில் வெளியிட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னா், அதில் இடம்பெற்ற தகவல்களை விதிமுறைகளை மீறி ஊடகங்களில் வெளியிட்டதற்காக தாமஸ் ஐசக் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் ஆலப்புழையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது தாமஸ் ஐசக் கூறியதாவது:

கேஐஐஎஃப்பியின் செயல்பாடு குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கை ஒருதலைப்பட்சமானது. அந்த அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னா் மாநில அரசிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. மாநிலத்தின் குரல்வளையை நெரித்து, பல்வேறு வளா்ச்சி திட்டங்களை சீா்குலைக்க வேண்டும் என்பதே சிஏஜியின் நோக்கமாக உள்ளது. இந்த அறிக்கை மாநில வளா்ச்சியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுகுறித்து பேச மறுக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கேரளத்துக்கு எதிராக தில்லியில் இருந்து மிகப் பெரிய அரசியல் சதி செய்யப்படுகிறது. எனவே நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும். கேஐஐஎஃப்பியை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com