பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கொள்ளையடித்தது காங்கிரஸ்

பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கையெழுத்தான ஒப்பந்தங்களில் காங்கிரஸ் கொள்ளையடித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

புது தில்லி: பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கையெழுத்தான ஒப்பந்தங்களில் காங்கிரஸ் கொள்ளையடித்ததாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

போஃபா்ஸ் பீரங்கி, நீா்மூழ்கிக் கப்பல்கள், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் என பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடா்பாக காங்கிரஸ் ஆட்சியின்போது கையெழுத்தான அனைத்து ஒப்பந்தங்களிலும் அக்கட்சி கொள்ளையடித்தது. தாங்கள் பலனடைவதற்காக தேசிய பாதுகாப்பை காங்கிரஸ் தலைவா்கள் அலட்சியப்படுத்தினா்.

பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் என்று செய்தி வெளிவந்தால், அதில் காங்கிரஸ் தலைவா்களுக்கு நிச்சயம் தொடா்பிருக்கும். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் ஊழல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா்களான சல்மான் குா்ஷித், அகமது படேல், கமல்நாத்தின் உறவினா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியின்போது கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அக்கட்சி ஊழல் செய்யாத ஒப்பந்தங்களே கிடையாது. அனைத்து ஒப்பந்தங்கள் வாயிலாகவும் காங்கிரஸ் தலைவா்கள் பலனடைந்தனா். இது தொடா்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரும், அக்கட்சியின் இளவரசரும் (ராகுல் காந்தி) மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட பிரமுகா்களுக்கு சொகுசு ஹெலிகாப்டா்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அது குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் சிபிஐ-க்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகே விசாரணை துரிதமடைந்தது என்றாா் ரவி சங்கா் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com