வீட்டிலிருந்தே வேலை: புறநகரில் வீடு தேடுவோர் அதிகரிப்பு

கரோனா.. இந்த ஒற்றைச் சொல்லால் உலகம் அடைந்த மாற்றங்கள் ஏராளம். துயரங்களும் ஏராளம்.
வீட்டிலிருந்தே வேலை: புறநகரில் வீடு தேடுவோர் அதிகரிப்பு
வீட்டிலிருந்தே வேலை: புறநகரில் வீடு தேடுவோர் அதிகரிப்பு


கரோனா.. இந்த ஒற்றைச் சொல்லால் உலகம் அடைந்த மாற்றங்கள் ஏராளம். துயரங்களும் ஏராளம். இயற்கைக்கு எதிரான வாழ்வை மேற்கொண்டிருந்த மனிதர்களை, சொல்லொணாத் துயருக்குள்ளாக்கி, பல்வேறு வகைகளில் மடைமாற்றி விட்டிருக்கிறது கரோனா எனும் பெருந்தொற்று.

அதில் ஒன்றுதான் வீட்டிலிருந்தே வேலை.. ஏதோ ஒரு சில துறைகளில் மட்டுமே சாத்தியமாகயிருந்த வீட்டிலிருந்தே வேலை என்ற முறையை, அனைத்துத் துறையினருக்கும் ஏன் மருத்துவத் துறைக்கும் கூட உரியதாக்கியது கரோனாவும் பொதுமுடக்கமும்.

வீட்டிலிருந்தே பணி என்பது பொதுமுடக்கக் காலத்துக்கான தற்காலிக தீர்வாக இருந்த நிலையில், பல நிறுவனங்கள் செலவினங்களைக் குறைக்க இதுவே நல்ல யோசனையாக இருப்பதால், அதைக் கைகொள்ள ஆரம்பித்துவிட்டன.

பல பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அதனால், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், தில்லி, புணே ஆகிய நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் வீடு தேடுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

வாடகைக்கு வீடு தேடுவோருக்கு உதவும் செல்லிடப்பேசி செயலிகளிலும் இந்த புறநகர்ப் பகுதிகளில் வீடு தேடுவோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கரோனாவுக்கு முந்தைய காலத்தில் அப்படி இருக்கவில்லை. பெரும்பாலும் பணியாற்றுவோரின் தேவை என்பது நகர்ப்பகுதிகளிலேயே முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது.

வீடு வாடகைக்குத் தேடுவோரும், சொந்தமாக வீடு வாங்குவோரும் கூட, இதுநாள்வரை தங்களது பணியிடங்களுக்கு அருகிலேயேதான் வீடு தேடி வந்தார்கள். ஆனால், அந்த நிலையை தற்போது மாற்றி, மனிதர்களின் வாழ்விட எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது வீட்டிலிருந்தே வேலை என்ற முறை.

முந்தைய காலத்தில் ஆறுகளைச் சுற்றி மனிதர்களின் வாழ்விடங்கள் அமைந்ததைப் போல கடந்த காலங்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதிகள், அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது.

தற்போது வீட்டிலிருந்தே வேலை என்ற புதிய முறையால், நகர்ப்பகுதியின் இரைச்சலில் இருந்து விடுபட விருப்பப்படுவோரால், புறநகர்ப் பகுதிகளில் வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 

குறிப்பாக பெங்களூரு என்று எடுத்துக் கொண்டால் பொதுமுடக்கக் காலத்துக்குப் பின் வொய்ட்ஃபீல்ட், எச்எஸ்ஆர் லேயவுட், எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய பகுதிகளில் வீடு தேடுவோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. அதே வேளையில், புறநகர்ப் பகுதிகளான ஹோரமாவு (32%), ஏலஹன்கா (56%), ஆர்டி நகர் (42%) மற்றும் ஹெப்பல் (36%) பகுதிகளில் வீடு தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இப்பகுதிகளில் வீடுகளின் வாடகையும், விலையும் நகர்ப் பகுதிகள் அளவுக்கு அதிகமில்லை. வாழ்வியல் சூழலும் சிறப்பாக இருப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் குறைவாகவே இருக்கும்.

அதே வேளையில், வீடு தேடுவோருக்கான செல்லிடப்பேசி செயலிகளில் மூன்று அல்லது நான்கு படுக்கை வசதிகள் கொண்ட வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாம்.

இதுபோன்றுதான் சென்னையிலும் காணப்படுகிறது. செல்லிடப்பேசி செயலிகளில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர் (46%), பெரம்பூர் (105%), கொளத்தூர் (77%), மயிலாப்பூர் (31%), வளசரவாக்கம் (26%) போன்றவற்றில் வீடு தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த தேவை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, போரூர், சூளைமேடு என்று இருந்தது.

இதேநிலைதான் ஹைதராபாத், தில்லி, புணே ஆகிய நகரங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் மக்கள் குவிவதால் அப்பகுதி வளர்ச்சி அடையும் என்றாலும், அதனால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிலத்தடி நீர் மட்டம் குறைவது, காற்று மாசு போன்றவற்றால் நாளடைவில் நகரப்பகுதியே, மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாமல் போய்விடும் நிலை ஏற்படலாம். ஆனால், அதற்கு ஈடாக புறநகர்ப் பகுதிகளும் வளர்ச்சி அடைவதும் ஒரு சமநிலையை ஏற்படுத்தலாம். 

மனிதர்களால் ஏற்படுத்த முடியாத இந்த சமநிலையை, பெருந்தொற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com