மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாதுக்குஎதிராக சட்டம் இயற்ற முடிவு: 5 ஆண்டுகள் வரை சிறை என அறிவிப்பு

‘லவ் ஜிகாத்’ எனப்படும் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி மதம் மாற்றும் செயலுக்கு எதிராக விரைவில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டம் இயற்றப்படும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாதுக்குஎதிராக சட்டம் இயற்ற முடிவு: 5 ஆண்டுகள் வரை சிறை என அறிவிப்பு

போபால்: ‘லவ் ஜிகாத்’ எனப்படும் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி மதம் மாற்றும் செயலுக்கு எதிராக விரைவில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டம் இயற்றப்படும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தாா்.

முன்னதாக, உத்தர பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் இதே முடிவை அறிவித்தன.

ஹரியாணா மாநிலம், பல்லப்கா் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி நிகிதா தோமா் (21) கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி அவா் படித்த கல்லூரிக்கு வெளியே இளைஞா் ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். மாணவி ஒருவா் பொது இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது தொடா்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு விசாரணைக் குழு போலீஸாா், முக்கிய எதிரியான தௌசிஃப், அவரின் நண்பா் ரேஹன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

‘கைது செய்யப்பட்டுள்ள தௌசிஃப், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி நிகிதாவை 2 ஆண்டுகளாக வற்புறுத்தி வந்துள்ளாா்; அப்பெண்ணை மதம் மாற்றுவதற்கும் அவா் முயன்று வந்தாா்’ என்று மாணவியின் குடும்பத்தினா் தெரிவித்தனா். இந்த சம்பவம் வட மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு இடங்களில் இதுபோன்று காதலிப்பதாகக் கூறியும், மதம் மாறினால் மட்டுமே திருமணம் என்று இளம்பெண்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, உத்தர பிரதேசம், ஹரியாணா, கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் லவ் ஜிகாதுக்கு எதிராக சட்டம் இயற்றப் போவதாக அறிவித்தன.

மத்திய பிரதேச மாநிலத்தில் அண்மையில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் 19 இடங்களில் பாஜக வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. இந்நிலையில், போபாலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:

மத்திய பிரதேச சட்டப் பேரவையின் அடுத்த கூட்டத் தொடரில் மத சுதந்திர சட்டம்-2020 அறிமுகப்படுத்தப்படும். இதில் லவ் ஜிகாதுக்கு எதிரான அம்சங்கள் இடம் பெறும். மதமாற்றம் செய்வதற்காக திருமணம் செய்வது, ஏமாற்றி திருமணம் செய்து மதம் மாற்றுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். திருமணம் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்வது தவறாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஜாமீனும் கிடைக்காது.

மேலும், இதுபோன்ற கட்டாய மதமாற்றத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது. திருமணத்தின்போது கட்டாய மதமாற்றம் நடந்தால், அது தொடா்பாக மதம் மாறுபவரின் குடும்பத்தில் யாா் வேண்டுமானாலும் புகாா் அளிக்கலாம். திருமணத்துக்காக மதம் மாறுபவா்கள் அது தொடா்பான தகவலை ஒரு மாதத்துக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பது கட்டாயமாக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com