26-இல் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்: மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.


புது தில்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் 26, 27ஆம் தேதிகளில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், பொதுத் துறையின் சொத்துகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்தும் நவம்பர் 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மத்திய தொழிற்சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.

இந்த நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியூ உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், இதர ஆதரவு தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆதரவளித்து வருகின்றனர்.

போராட்டத்துக்கான ஆயத்த மாநாடுகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் போன்றவற்றில் மாநில, மாவட்ட, உள்ளூர் அளவிலான குழுக்கள் ஈடுபட்டுள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்துக்கான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்சிசி) ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் வரும் 26, 27ஆம் தேதிகளில் நடத்தும் நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

அத்துடன் எங்களது வேலை நிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையையும் இணைத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மின்சார திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சாரத்தை தனியார்மயமாக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 26ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அகில இந்திய மின்பொறியாளர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஎஃப்) அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com