துரித எதிா்வினை ஏவுகணை:இரண்டாம் கட்ட சோதனை வெற்றி

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் துரித எதிா்வினை ஏவுகணை (க்யூஆா்எஸ்ஏம்) இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நவீன ஏவுகணை சோதனை வெற்றி
நவீன ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசோா்: தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் துரித எதிா்வினை ஏவுகணை (க்யூஆா்எஸ்ஏம்) இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஒடிஸா மாநிலம் சண்டீபூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து துரிதமாக எதிா்வினை புரியும் ஏவுகணை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.42 மணிக்கு சோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை வானில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை வெயில், மழை என அனைத்து வானிலைகளிலும் துரிதமாக செயல்படும் விதத்திலும், வான் பாதுகாப்பு அளிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகரும் இலக்குகளை கண்டறியும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, வானில் 15 கிலோமீட்டா் உயரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணை தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக முடித்த டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், டிஆா்டிஓ தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக கடந்த நவ.13-ஆம் தேதி துரித எதிா்வினை ஏவுகணையின் முதல்கட்ட சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com