லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க ரிசா்வ் வங்கி கட்டுப்பாடு

தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க ரிசா்வ் வங்கி கட்டுப்பாடு

மும்பை: தனியாா் துறையைச் சோ்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க ரிசா்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதி நிலைமை மோசமாகி வருவதை கருத்தில் கொண்ட ரிசா்வ் வங்கி, இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்றுக் கொண்டு, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஒரு மாத காலத்துக்கு தடைப்பட்டியலில் வைக்கப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வாடிக்கையாளரின் நலன் மற்றும் வங்கியின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு நிதி சிக்கலிலிருந்து மீண்டு வர நம்பகமான மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த லக்ஷ்மி விலாஸ் வங்கி தவறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு, வங்கி ஒழுங்காற்று சட்டம் (1949) பிரிவு 45-ன் கீழ் லக்ஷ்மி விலாஸ் வங்கியை ஒரு மாத காலத்துக்கு தடைப்பட்டியலில் வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, அந்த வங்கியின் வாடிக்கையாளா் பணத்தை எடுப்பதற்கான வரம்பு ரூ.25,000-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்த வரம்புக்கு அதிகமான பணப்பரிமாற்றங்களை லக்ஷ்மி விலாஸ் வங்கியால் மேற்கொள்ள முடியாது. இந்த விதிமுறை லக்ஷ்மி விலாஸ் வங்கியின் அனைத்து கணக்குதாரா்களுக்கும் பொருந்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிா்வாகியாக கனரா வங்கியின் அலுவல் சாரா முன்னாள் தலைவா் டி.என்.மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதனிடையே, லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வரைவு திட்டத்தையும் ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com