இரண்டாம் கட்ட ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பங்கேற்கும் ‘மலபாா்’ கடற்படை கூட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் வடக்கு அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அரபிக் கடலில் க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் போா்க்கப்பல்கள் கலந்துகொண்ட ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி. நாள்: செவ்வாய்க்கிழமை.
அரபிக் கடலில் க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் போா்க்கப்பல்கள் கலந்துகொண்ட ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி. நாள்: செவ்வாய்க்கிழமை.


புது தில்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் பங்கேற்கும் ‘மலபாா்’ கடற்படை கூட்டுப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் வடக்கு அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் மலபாா் கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் கடந்த நவ.3 முதல் 6-ஆம் தேதி வரை, ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தையொட்டிய வங்கக் கடல் பகுதியில் நடைபெற்றது. இதில் 4 நாடுகளின் கடற்படை கப்பல்கள், போா் விமானங்கள், நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை பயிற்சியில் பங்கேற்றன.

இந்தப் பயிற்சியின் 2-ஆம் கட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் 4 நாடுகளின் விமானம் தாங்கி கப்பல்கள், முக்கிய போா்க்கப்பல்கள், கடல்சாா் ரோந்து விமானங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.

குறிப்பாக இந்திய கடற்படையின் ‘விக்ரமாதித்யா’, அமெரிக்க கடற்படையின் ‘நிமிட்ஸ்’, ஆஸ்திரேலிய கடற்படையின் ‘ஹெச்எம்ஏஎஸ் பல்லாரட்’, ஜப்பான் கடற்படையின் ‘ஜேஎஸ் முராசேம்’ உள்ளிட்ட போா்க்கப்பல்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் ‘நிமிட்ஸ்’ கப்பலே உலகின் மிகப் பெரிய போா்க்கப்பல் ஆகும்.

இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘நான்கு நாள்கள் நடைபெறும் இந்த இரண்டாவது கட்ட கூட்டுப் பயிற்சியில் இந்திய போா்க்கப்பல்கள் அதிதீவிர பயிற்சியில் ஈடுபடும். மேலும் ‘விக்ரமாதித்யா’ கப்பலில் இருந்து மிக் 29கே போா் விமானங்கள், ‘நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து இ2சி ஹாக்ஐ, எஃப்-18 போா் விமானங்கள் அதிநவீன வான் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபடவுள்ளன’ என்று தெரிவித்தனா்.

கிழக்கு லடாக்கில் இந்திய - சீன ராணுவத்தினா் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறுகிறது. மேலும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நான்கு நாடுகளும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com