
ஹிமாசலில் ஒட்டுமொத்த கிராமத்துக்கும் கரோனா; ஒரே ஒருவரைத் தவிர
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தோரங் கிராமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 52 வயதான பூஷண் தாகூர் என்பவருக்கு மட்டும் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, இந்த கிராமத்தில் ஒரு மத வழிபாட்டு விழா நடைபெற்றுள்ளது. அப்போது கூட்டம் கூடியதால்தான், ஒரு கிராமம் முழுக்க கரோனா தொற்று பரவியதாகக் கூறப்படுகிறது.
இந்த கிராமத்தில் வசித்து வந்த 42 பேரும், தாங்களாக முன் வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், 42 பேரில் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில்லை என்று தெரிய வந்த அந்த நபர் இது பற்றி கூறுகையில், நான் எப்போதும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, கையை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கழுவி வந்தேன். முகக்கவசம் அணிந்தே இருந்தேன் என்று கூறுகிறார். மேலும், கரோனாவை மக்கள் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த மதவழிபாட்டு விழாவில் பங்கேற்ற அக்கம் பக்கத்து கிராம மக்களும், தங்களுக்கும் கரோனா தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.