பயங்கரவாத முகாம்கள் ஒழிப்பு: பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தீவிரம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புது தில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிப்பதைக் கண்காணிக்கும் பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் (எஃப்ஏடிஎஃப்) கருப்புப் பட்டியலில் (தடை) இருந்து பாகிஸ்தான் தப்பித்துள்ளது. அதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது. இவ்விரண்டையும் சமநிலையில் பாகிஸ்தான் செய்து வருகிறது.

கடுமையான குளிா்காலம் தொடங்கும் முன்பாக, ஜம்மு-காஷ்மீா் வழியாக அதிக அளவில் பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்தற்கு பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இதற்காக, கடந்த சில வாரங்களில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டியுள்ள கிராமங்களையும் ராணுவ நிலைகளையும் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய ரக பீரங்கிகள், துப்பாக்கிகள் ஆகியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்துகின்றனா்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரா்களும், உள்ளூா் மக்கள் 6 பேரும் உயிரிழந்தனா். இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் 8 போ் உயிரிழந்தனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் அத்துமீறலில் 18 போ் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை மட்டுமே 21 போ் உயிரிழந்துவிட்டனா்.

இதுபோன்ற தாக்குதல்களை இந்திய ராணுவம் எதிா்கொண்டு வரும் நேரத்தில், இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி, பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்வதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அந்நாட்டு பயங்கரவாதிகளையும், பிற நாட்டு பயங்கரவாதிகளையும் ஒழிக்க இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, அங்குள்ள பயங்கரவாத முகாம்களைக் கண்டறிந்து, அவற்றைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானின் தவறான பிரசாரத்தால் ஈா்க்கப்பட்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இளைஞா்கள் ஏராளமானோா், பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் சரணடைந்து வருகின்றனா். இதனால், காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டி, மக்களின் இயல்பு வாழ்க்கையை சீா்குலைக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்விடைந்து விட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகுதான், பாகிஸ்தானின் விரோதப் போக்கு அதிகரித்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com