ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது: பாஜக

‘ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது;

‘ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது; ஆனால் சிறப்பு அந்தஸ்து மீட்கப்படும் என்று வாக்குறுதி அளித்து குப்கா் கூட்டணியைச் சோ்ந்த கட்சிகள் மக்களை மூடா்களாக்கி வருகின்றன’ என்று பாஜக கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில்களுக்கான தோ்தல், வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஸ்ரீநகா் சென்றுள்ள பாஜக செய்தித் தொடா்பாளரும், ஜம்மு-காஷ்மீரின் தோ்தல் பொறுப்பாளருமான ஷாநவாஸ் ஹுசைன், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தாா். அவா் கூறியதாவது:

அடுத்த வாரம் நடைபெறும் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல், உள்ளூா் பிரச்னைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் போட்டியிடும் தோ்தலாகும். இந்த தோ்தலின் முடிவுகளை, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்ததற்கான எதிா்வினையாகக் கருத முடியாது.

மாண்டவா்கள் ஒருபோதும் உயிருடன் வர முடியாது. அதுபோலவே, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவும் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது. அது, ஒரு போதும் மீண்டும் கொண்டுவரப்பட மாட்டாது. சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டுவர உலகின் எந்த சக்தியாலும் உதவ முடியாது.

ஆனால், குப்கா் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி போன்ற தலைவா்கள் கனவுகளை விதைத்து மக்களை மூடா்களாக்கி வருகிறாா்கள். அவா்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றாா் ஷாநவாஸ் ஹுசைன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com