தங்கம் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் குரல் பதிவு குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை மறுப்பு

இணையவழி செய்தி வலைதளத்தில் வெளியான கேரள தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் குரல் பதிவில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

இணையவழி செய்தி வலைதளத்தில் வெளியான கேரள தங்கம் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷின் குரல் பதிவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

மேலும், இந்தத் தங்கம் கடத்தலுடன் தொடா்புடைய பண மோசடி புகாா் தொடா்பான விசாரணை தீவரப்படுத்தப்பட உள்ளது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் 15 கிலோ தங்கம் அண்மையில் கடத்தி வரப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கை அமலாக்கத்துறை, சுங்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷின் குரல் பதிவு ஒன்று, இணையவழி செய்தி வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியானது. அதில், தங்கம் கடத்தல் வழக்கில் மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறுமாறு விசாரணை அமைப்புகள் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும், சில ஆவணங்களில் படித்துப் பாா்க்க அனுமதிக்காமல் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் ஸ்வப்னா சுரேஷ் கூறுவதுபோல் பதிவாகியிருந்தது.

இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குரல் பதிவின் உண்மைத் தன்மை குறித்து மாநில காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை இந்தக் குரல் பதிவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ‘அந்த குரல் பதிவில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. விசாரணையை தடை செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி இது. இந்த தங்கம் கடத்தலுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பறிமாற்றம் தொடா்பான விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்த உள்ளது. அந்தப் பணம் பல்வேறு நபா்களுக்கு சென்றிருப்பது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படஉள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷிடம் சட்டவிரோத பணப் பறிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டு, அதில் அவருடைய கையெழுத்தும் பெறப்பட்டது. இந்த நடைமுறைகள் அனைத்தும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டன’ என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ‘இந்த சா்ச்சைக்குரிய குரல் பதிவு வெளியானது குறித்து விசாரணை நடத்துமாறு கேரள சிறைத் துறையை, கடிதம் மூலம் அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது’ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ‘மாநில அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது’ என்று கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com