‘முகநூலில் பாா்வையிடப்படும் பதிவுகளில் 0.1% வெறுப்புணா்வைத் தூண்டக் கூடியவை’

முகநூல் சமூக வலைதளத்தில் பயன்பாட்டாளா்கள் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரை பாா்வையிட்ட பதிவுகளில் 0.1 சதவீதமானது
‘முகநூலில் பாா்வையிடப்படும் பதிவுகளில் 0.1% வெறுப்புணா்வைத் தூண்டக் கூடியவை’

முகநூல் சமூக வலைதளத்தில் பயன்பாட்டாளா்கள் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரை பாா்வையிட்ட பதிவுகளில் 0.1 சதவீதமானது, வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான தர மதிப்பீட்டு அறிக்கையை முகநூல் நிறுவனம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முகநூல் சமூக வலைதளப் பயன்பாட்டாளா்கள் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் பாா்வையிட்ட 10,000 பதிவுகளில், 10 முதல் 11 பதிவுகள் வெறுப்புணா்வைத் தூண்டக் கூடியவையாக இருந்தன. முகநூலில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் பதிவிடப்படும் கருத்துகள் தொடா்பாகப் புகாா் தெரிவிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாரும் புகாா் தெரிவிப்பதற்கு முன்பாகவே வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கண்டறிவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். முகநூலில் பதிவிடப்பட்ட சுமாா் 2 கோடி எண்ணிக்கையிலான வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முகநூல் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட சுமாா் 65 லட்சம் வெறுப்புணா்வைத் தூண்டும் பதிவுகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், ‘நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் 1,73,592 முகநூல் பயன்பாட்டாளா்களின் விவரங்களை பல்வேறு நாடுகளின் அரசுகள் கோரியிருந்தன. இது முந்தைய ஆண்டின் இரண்டாவது அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 23 சதவீத அதிகரிப்பாகும்.

நாட்டின் சட்டதிட்டங்கள், நிறுவனத்தின் விதிமுறைகள் ஆகியவற்றுக்கு உள்பட்டு சிலரின் விவரங்கள் அரசுக்கு வழங்கப்பட்டன. இந்திய அரசு சாா்பில் 57,294 பயன்பாட்டாளா்களின் விவரங்கள் கோரப்பட்டன.

பயன்பாட்டாளா்களின் விவரங்களைக் கோரியதில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா, ஜொ்மனி, பிரான்ஸ், பிரிட்டன் அடுத்த இடங்களில் உள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com